ஆசை ஆசையா போனாரே.. சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற.. புதுக்கோட்டை மாணவரை பலி வாங்கிய கொரோனா?
புதுக்கோட்டை: புதுக்கோட்டையை சேர்ந்த தமிழக மாணவர் ஒருவர் சீனாவில் மருத்துவம் பயின்று வந்த நிலையில், தற்போது திடீரென உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சையது அப்துல் ஹாசன். இவர் செருப்புக்கடை நடத்தி வரும் நிலையில், இவரது மகன் ஷேக் அப்துல்லா சீனாவில் மருத்துவம் பயின்று வந்திருக்கிறார். சமீபத்தில் மருத்துவ படிப்பு முடிந்த நிலையில் புதுக்கோட்டை திரும்பி இருக்கிறார். இதனையடுத்து மீண்டும் பயிற்சிக்காக கடந்த 11ம் தேதியன்று சீனா சென்றிருக்கிறார். அங்குள்ள க்யூக்கார் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இந்த பயிற்சியை அவர் மேற்கொண்டு வந்திருக்கிறார்.
இவ்வாறு இருக்கையில்தான் புதிய வகை கொரோனா தொற்று தீவிரமாக பரவ தொடங்கி இருக்கிறது. இந்த தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த வழக்கம் போல தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆனால் இதனை எதிர்த்து சீனாவில் பெரும் போராட்டம் நடைபெற்றது. தொடர் கட்டுப்பாடுகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், எனவே கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் மக்கள் முழங்கினர்.

கட்டுப்பாடுகள் தளர்வு
எனவே சீன அரசு தற்போது கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இதனால் உயிரிழப்பு கடுமையாக அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது சுமார் 1.8 கோடி பேர் இந்த தொற்றால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளொன்றுக்கு சுமார் 9,000 பேர் வரை உயிரிழப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் சீன அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி அந்நாட்டில் உயிரிழப்பு என்பது 5 ஆயிரத்து சொச்சமாகதான் இருக்கிறது. எனினும் தற்போது சில வீடியோக்கள் சீனாவிலிருந்து வெளியாகி இருக்கின்றன. அதில் பலர் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் தரையில் படுத்து சிகிச்சை பெற்று வருவது தெரியவந்திருக்கிறது.

மருத்துவமனையில் அனுமதி
நிலைமை இவ்வாறு இருக்க தமிழ்நாட்டிலிருந்து சீனா சென்ற மாணவர் ஷேக் அப்துல்லா, சில நாட்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். ஆனால் கடந்த 10 நாட்களாக அவரிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இதனையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த பெற்றோர் அவர்களது நண்பர்களை அழைத்து விசாரித்திருக்கின்றனர். அப்போதும் சரியான தகவல்கள் ஏதும் தெரியவில்லை. இதனையடுத்து கடந்த 24ம் தேதியன்று இவர்களுக்கு சீனாவின் க்யூக்கார் மருத்துவ பல்கலைக்கழகத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது.

உடல்நலம் பாதிப்பு
அதில், ஷேக் அப்துல்லாவுக்கு உடல் நலம் மோசமாக இருப்பதாகவும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர், உடனடியாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்றை கொடுத்தனர். அதில், சீனாவில் உயிருக்கு போராடி வரும் தன்னுடைய மகன் ஷேக் அப்துல்லாவுக்கு உயர்தர சிகிச்சை அளித்து அவரை பத்திரமாக இந்தியாவுக்கு மீட்டு கொண்டுவர வேண்டும் என்றும் அதற்கான முயற்சியை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

உயிரிழப்பு
இந்த மனு கொடுத்து 4 நாட்கள் ஆன நிலையில் பெற்றோர்கள் தொடர்ந்து தனது மகனிடம் பேச முயன்று வந்தனர். ஆனால் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக சீன பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது. இதனை சற்றும் எதிர்பாராத ஷேக் அப்துல்லாவின் பெற்றோர் பெரும் சோகத்தில் மூழ்கி இருக்கின்றனர். அடுத்த கட்டமாக மாணவன் ஷேக் அப்துல்லாவின் உடல் பத்திரமாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று அவரது உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஷேக் அப்துல்லாவின் மரணத்திற்கு கொரோனா தொற்றுதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னர்தான் தெரிய வரும். மருத்துவம் படிக்க சீனா சென்ற மாணவர் அங்கேயே உயிரிழந்திருப்பது புதுக்கோட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications