'இந்தியாவில் முதல்வர்களுக்கே முதல்வராக திகழ்பவர்.. நம்ம முதல்வர் ஸ்டாலின்..' பாராட்டி தள்ளிய உதயநிதி
புதுக்கோட்டை: சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா என அனைவரும் திமுக அரசை பாராட்டுவதாகத் தெரிவித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, சிறப்பான ஆட்சியால் இந்தியாவில் முதல்வர்களுக்கே முதல்வராக ஸ்டாலின் திகழ்வதாகவும் குறிப்பிட்டார்.
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின், நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக கீரனூரில் நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றோருக்குப் பரிசளித்த அவர். பின்னர் புதுக்கோட்டையில் இளைஞரணி நிர்வாகிகளைச் சந்தித்தும் ஆலோசனை நடத்தினார்

உதயநிதி ஸ்டாலின்
அதைத் தொடர்ந்து அங்கு அமைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமிற்குச் சென்ற அவர், அங்குள்ளவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இதையடுத்து புதுக்கோட்டை திருக்கோகரணத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டத் தலைவராக இருந்த மூர்த்தி, முன்னாள் அரசு வழக்கறிஞர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5,000க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் தங்கள் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். புதிதாகக் கட்சியில் இணைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி, திமுத கரை பதிக்கப்பட்ட வேட்டிகளையும் பரிசாக அளித்தார்.

முத்தான அறிவிப்புகள்
இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "ஏற்கனவே இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் முறையான விசாரணை நடத்தித் தண்டிக்கப்படுவார்கள். சட்டசபையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காகவும் முதல்வர் பல முத்து முத்தான அறிவிப்புகளை 110 விதியின் கீழ் வெளியிட்டுள்ளார். அங்குச் சட்டசபையில் யாருமே திமுக அரசுக்கு எதிராகப் பேசுவதில்லை.

போர் அடிக்கிறது
சட்டசபையில் நாங்கள் அதிக நேரம் உட்கார்ந்து இருக்கிறோம். அங்கு எங்களால் ரொம்ப நேரம் உட்கார முடியவில்லை. போர் அடிக்கிறது. ஏனென்றால் அங்கு யாருமே எங்களை எதிர்த்துப் பேசுவதில்லை. சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம், அதிமுக கொறடா எஸ் பி வேலுமணி என எல்லாருமே திமுக அரசைத் தொடர்ந்து பாராட்டிப் பேசி வருகின்றனர். அந்த அளவுக்கு திமுக அரசின் செயல்பாடுகள் உள்ளன.

ஆட்சி தொடரும்
திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியதைப் போல பெட்ரோல் விலை குறைப்பு, ஆவின் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் எனப் பல திட்டங்களை வரிசையாகச் செயல்படுத்தி வருகிறோம். இங்கு எதுவும் நிரந்தரம் இல்லைதான். ஆனால், தமிழ்நாடு முதல்வர் இதேபோன்ற ஒரு சிறப்பான ஆட்சியை அளித்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாம் வாக்கு கேட்கத் தேவையில்லை. அடுத்த சட்டசபைத் தேர்தலில் தமிழக மக்களே நமக்கு மிகப் பெரிய ஒரு வெற்றியை அளிப்பார்கள். இதில் எனக்கு மிகப் பெரிய நம்பிக்கை உள்ளது.
Recommended Video

முதல்வர்களுக்கே முதல்வர்
கடந்த 3 மாதங்களில் திமுகவின் ஆட்சி மிகச் சிறப்பாக உள்ளது. இதனால் இந்திய அளவில் முதல்வருக்கே முதல்வராக மு க ஸ்டாலின் திகழ்கிறார். அதிமுக ஆட்சியில் இருந்த போது ஆறு மாதங்களில் வெறும் 50 லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருந்தது. ஆனால் , திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வெறும் 110 நாட்களில் கொரோனா பரவல் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு எடுத்த சிறப்பான நடவடிக்கைகளால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விரைவாக கட்டுக்குள் வந்துள்ளது. மேலும், மத்திய அரசிடம் வலியுறுத்திக் கூடுதல் தடுப்பூசிகளைப் பெற்று, தமிழ்நாட்டில் இதுவரை 3.70 கோடி பேருக்கு வேக்சின் போட்டுள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications