ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு இன்சூரன்ஸ்.. அமைச்சர் ரகுபதி சொன்ன தகவல்!
புதுக்கோட்டை : ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஒழுங்குபடுத்துவதற்காகவே ஆன்லைன் பதிவு செய்யப்படுகிறது என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சியில் ஜனவரி 6-ஆம் தேதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
மேலும், ஆன்லைன் ரம்மியை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டி
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சியில் வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பலரும் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கிவிட்டனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஒழுங்குப்படுத்துவதற்காகவே ஆன்லைன் பதிவு செய்யப்படுகிறது. எனவே, அதுகுறித்து விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை எனத் தெரிவித்தார்.

மாடுபிடி வீரர்களுக்கு இன்சூரன்ஸ்
மேலும் பேசிய அவர் காப்பீடு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜல்லிகட்டு போட்டிகளை நடத்துபவர்களை காப்பீடு செய்கின்றனர். வரும் காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக விழா ஏற்பாட்டாளர்கள் காப்பீடு செய்வதைப் போல, போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் காப்பீடு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மறைமுகமாக பாதுகாக்கும் சட்டம்?
மேலும் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்டங்களை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம் எனவும் அந்தவகையிலேயே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கொண்டு வரப்பட்டது என்றும் தெரிவித்தார். மேலும், ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் தொடர்பாக 15 நாட்களுக்குள் மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டுள்ளது. அதை முழுவதுமாக நான் இன்னும் படித்துப் பார்க்கவில்லை. அதை படித்துப் பார்த்த பின்னர்தான் கருத்து சொல்ல முடியும். மத்திய அரசு கொண்டு வரும் சட்டம், ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை மறைமுகமாக பாதுகாக்கும் வகையில் இருந்தால், அதை கண்டிப்போம் என்றும் தெரிவித்தார்.

ஒப்புதலுக்கு காத்திருக்கிறது
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான மசோதா தமிழக சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் நிறைவேறியது. அதன்பிறகு இந்த மசோதா தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப்பட்டது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கவில்லை. இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் சில விளக்கம் கேட்டிருந்தார். தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், டிசம்பர் 1ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று ஆளுநரை சந்தித்து விளக்கமளித்தார். இன்னும் அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications