காதலுக்கு எல்லை கிடையாது.. கடல் கடந்த காதல்.. ஹாங்காங் பெண்ணை மணந்த புதுக்கோட்டை இளைஞர்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஹாங்காங் பெண்ணை தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கோவிலில் நடைபெற்றது. இங்குள்ள கலாசாரம் மிகவும் நன்றாக உள்ளது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு எல்லோரும் என்னை நன்றாக வரவேற்றனர் என தமிழ்நாட்டிற்கு மருமகளாக வந்த ஹாங்காங் பெண் கூறினார்.
காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள்.. மொழி, இனம், அந்தஸ்து என எந்த பாகுபாடும் உண்மையான காதலுக்கு இல்லை என்பதையே இவ்வாறு சொல்வதுண்டு.
அன்பும் பாசமும் புரிதலும் இருந்தால் போதும்... கடல் கடந்த காதலும் நிச்சயம் கைகூடும் என்று பல சினிமாக்களில் கூட காட்டப்பட்டு இருக்கும். அதேபோன்ற ஒரு சம்பவம் தான் புதுக்கோட்டையில் நடைபெற்றுள்ளது. ஹாங்காங் நாட்டு பெண்ணை காதலித்து புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் மணம் முடித்துள்ளார். இது குறித்த சுவாரசிய தகவல்கள் வருமாறு:-

ஹாங்காங் பெண்ணுடன் காதல்
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). என்ஜினீயரிங் பட்டதாரியான மணிகண்டன் ஹாங்காங் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். ஹாங்காங்கில் பணி புரியும் இடத்தில் அங்குள்ள ஒரு சென் என்கிற செல்சீ என்ற பெண் மீது இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்துள்ளனர். தனது வீட்டிலும் ஹாங்காங் நாட்டு பெண்ணை காதலிப்பதை கூறிய மணிகண்டன் பெற்றோர் சம்மதத்தையும் வாங்கினார்.

காதலை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினர்
மணப்பெண் செல்சீ வீட்டிலும் இந்த காதலை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து மணிகண்டன் புதுக்கோட்டையில் திருமணத்தை முடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதற்காக ஹாங்காங்கில் இருந்து மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை மணிகண்டன் அழைத்து வந்தார். புதுக்கோட்டையில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் இந்து பாரம்பரிய முறைப்படி நடத்த முடிவு செய்யப்பட்டது.

சேலை அணிந்து பாரம்பரிய முறைப்படி
இதன்படி நேற்று கோவிலில் வைத்து ஹாங்காங் நாட்டை சேர்ந்த தனது காதலி செல்சீக்கு புதுக்கோட்டை இளைஞர் மணிகண்டன் மேளதாளங்கள் முழங்க கழுத்தில் மூன்று முடிச்சு போட்டார். மணப்பெண் தமிழ்நாட்டு பெண் போலவே சேலை அணிந்து பாரம்பரிய முறைப்படி வந்திருந்தது அங்கிருந்தவர்களை ரசிக்க வைத்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவினர்களும் மணமக்களை மலர்தூவி வாழ்த்தினர்.

இங்குள்ள கலாசாரம் மிகவும் நன்றாக உள்ளது
ஹாங்காங் பெண்ணுடன் காதல் மலர்ந்தது பற்றி மணமகன் மணிகண்டன் கூறியதாவது:- ஹாங்காங்கில் நான் பணி செய்து வந்த இடத்தில் செல்சீயை சந்தித்தேன். 2 வருடங்களாக நாங்கள் காதலித்து வந்தோம். இந்திய கலாசாரப்படி திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்து அவரது வீட்டிலும் சம்மதம் வாங்கினோம். செல்சீயின் வீட்டிலும் எங்கள் காதலை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. ஹாங்காங்கில் இருந்து அவரது பெற்றோர்களும் வந்து இருந்தனர்". இவ்வாறு அவர் கூறினார். மணமகள் செல்சீ கூறுகையில், "இங்குள்ள கலாசாரம் மிகவும் நன்றாக உள்ளது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு எல்லோரும் என்னை நன்றாக வரவேற்றனர். அன்பாக பழகினார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications