ஆளுநரை சந்தித்ததன் எதிரொலி.. விஜய்-ன் Y பிரிவு பாதுகாப்புக்கு அதுவே காரணம்.. வேல்முருகன் கருத்து!
புதுக்கோட்டை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கேட்காமல், அவரிடம் இருந்து எந்த கோரிக்கையும் வராமல், ஆளுநரை சந்தித்ததன் எதிரொலியாக மத்திய உள்துறை அமைச்சகம் தாமாக முன் வந்து Y பிரிவு பாதுகாப்பு அளித்திருப்பதில் அரசியல் இருப்பதாக தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்-க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது. இதன் காரணமாக விஜய் உடன் எப்போதும் 8 முதல் 11 துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இருப்பார்கள். தமிழ்நாட்டிற்குள் மட்டுமே விஜய்-க்கு இந்த பாதுகாப்பு அளிக்க மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.

ஏனென்றால் தமிழக வெற்றிக் கழகம் தரப்பிலோ அல்லது நடிகர் விஜய் தரப்பிலோ மத்திய அரசுக்கு எந்தவித பாதுகாப்பு கோரிக்கையும் வைக்கப்படவில்லை. விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக மாநாடு, பரந்தூரில் புதிய விமான நிலையத் திட்டத்திற்கு எதிரான போராடிய மக்களை சந்தித்த போதும் கூட விஜய் தனியார் பவுன்சர்களை மட்டுமே பாதுகாப்புக்காக வைத்திருந்தார்.
அதுவும் அவருடன் புகைப்படம் எடுக்க வரும் ரசிகர்களை கட்டுப்படுத்தவே பவுன்சர்கள் இருந்தனர். இதனைத் தொடர்ந்து தவெக தலைமை நிலையம் வரும் போது விஜய் எந்த பவுன்சர்களையும் பயன்படுத்தவில்லை. சக தொண்டர்களின் அரவணைப்புடன் மட்டுமே பணியில் இருந்தார். இந்த நிலையில் திடீரென விஜய்-க்கு Y பிரிவு வழங்கப்பட்டிருப்பது பல்வேறு குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விஜய் அடுத்தடுத்து பல்வேறு தரப்பினரையும் சந்திக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள உளவுத்துறை அலுவலர்கள் கொடுக்கும் அறிக்கையை பொறுத்தே மத்திய உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது. நியாயமாக பார்த்தால் தமிழக அரசே விஜய்-க்கு பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டதில் அரசியல் இருப்பதாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசும் போது, திடீரென விஜய் கேட்காமல், அவரிடம் இருந்து எந்த கோரிக்கையும் வராமல், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்ததன் எதிரொலியாக மத்திய அரசு பாதுகாப்பு தந்திப்பதில் அரசியல் இருப்பதாகவே நான் கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications