அடங்காத இலங்கையின் அட்டூழியம்! தமிழக மீனவர்கள் மேலும் 10 பேர் நடுக்கடலில் கைது- சிறையில் 47 பேர்!
ராமேஸ்வரம்: தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையால் சில நாட்களுக்கு முன்னர் 22 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் மொத்தம் 47 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டு மீனவர்களை நடுக்கடலில் தாக்கி கைது செய்யும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் மீண்டும் தலைதூக்கி உள்ளது. 2 நாட்களுக்கு முன்னர்தான் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்த தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது இலங்கை. இதனைக் கண்டித்தும் மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். அதில், கடந்த 22.06.2024 அன்று, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள், IND- TN-10-MM-84, IND-TN-10-MM-88 மற்றும் IND-TN-10-MM-340 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட மூன்று இயந்திரப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 37 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையில் இருந்து கொண்டு வருவதற்கு மீட்புப் படகுகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதலும் அடிப்படைத் தேவைகளையும் வழங்கிட அனுமதி தர வேண்டுமென தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.
மீனவர்களின் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழுவினை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண இலங்கை அதிகாரிகளிடம் எடுத்துரைத்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்த நிலையில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை இன்று நடுக்கடலில் தாக்கி கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டு மீனவர்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications