விற்பனைக்கு தடை செய்யப்பட்ட 64 ஏக்கர் நிலம்.. மீண்டும் நடிகை கௌதமிக்கு அல்வா கொடுத்த 13 பேர்
ராமநாதபுரம் : செபி நிறுவனம் விற்பனை செய்யக்கூடாது என தடை விதித்த அந்த 64 ஏக்கர் நிலத்தை வைத்து நடிகை கௌதமியிடம் கோடிகளை கறந்ததுடன், அவரை ஏமாற்றி மோசடி செய்திருக்கிறது ஒரு கும்பல். அழகப்பன் உள்பட அந்த கும்பலை சேர்ந்த 13 பேர் மீது ராமநாதபுரம் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
80கள் மற்றும் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் கௌதமி. இவர் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்தவர். தமிழகத்தில் செட்டில் ஆன இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். கடந்த 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதி பாஜக பொறுப்பாளராக இருந்த கௌதமி, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம், தனது சொத்துக்களை பறித்த நபருக்கு பாஜகவின் மூத்த தலைவர்கள் உதவுவதாக குற்றம் சாட்டி அக்கட்சியில் இருந்து விலகினார்.

இந்த விவகாரம் குறித்து விசாரித்த போது தான் மிகப்பெரிய சதி திட்டமும், பண மோசடி நடந்ததும் தெரியவந்தது. நடிகை கவுதமிக்கு சில வருடங்கள் முன்பு அழகப்பன் என்பவர் அறிமுகமாகி இருக்கிறார். அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் நம்பிக்கை ஏற்படும்படி நடந்து கொண்டதால் நடிகை கவுதமி தனது சொத்துகளை பாதுகாத்து நிர்வகிக்கும் பொறுப்பை அழகப்பனுக்கு வழங்கியிருக்கிறார்.
மேலும் இதுவரை வாழ்நாள் முழுவதும் சினிமாவில் சம்பாதித்த பணத்தையும் அழகப்பனின் ஆலோசனையின்படி நிலத்தில் கவுதமி ரியல் எஸ்டேட் துறையில் செய்துள்ளார். அப்படித்தான் அழகப்பன் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கண்டிலான் பகுதி துலுக்கன்குறிச்சியில் ஏக்கர் கணக்கில் விவசாய நிலம் விற்பனைக்கு வரவுள்ளதாகவும், நில புரோக்கர் நெல்லியான் என்பவரிடம் 2016-ம் ஆண்டில் பேசி முடித்துவிட்டதாகவும் அதற்கான தொகை ரூ.3 கோடியே 16 லட்சம் வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். அந்த நிலத்தை பற்றி எந்த விவரத்தையும் அறியாமல், வெறும் நம்பிக்கையின் அடிப்படையில், நடிகை கவுதமி அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சியாள் வங்கி கணக்கில் பணமாகவும், காசோலையாகவும் கொடுத்துள்ளார்.
ஆனால் கௌதமி வாங்கிய நிலம் என்பது செபி நிறுவனம் விற்பனை செய்யக்கூடாது என தடை விதித்த அந்த 64 ஏக்கர் நிலம் ஆகும். இது தொடர்பான முழு விவரம் தெரிந்திருந்தும், அழகப்பன், நெல்லியான், தனியார் நிறுவன இயக்குனர்களான ஜோசப் ஜெயராஜ், பாக்கிய சாந்தி, ஜெயபாலன், சந்தான பீட்டர் உள்ளிட்டோர் கூட்டு சதி செய்து ரூ.56 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய்க்கு நிலத்தை எழுதிக்கொடுத்துள்ளனர். மீதம் உள்ள பணத்தை ஏமாற்றி அபகரித்து கொண்டிருக்கிறார்களாம்.
இதுஒருபுறம் எனில் கெவுதமி பெயரில் வாங்கிய நிலத்தையும், நிலம் வாங்குவதற்காக கொடுத்த பொது அதிகார ஆவணத்தை பயன்படுத்தி அழகப்பன் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் 49 வருட குத்தகை ஒப்பந்தம் போட்டு மோசடி செய்துவிட்டார்களாம். இது குறித்து கௌதமி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகார் தொடர்பாக நேரில் ஆஜராகி கௌதமி விளக்கமும் கொடுத்தார்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவேனில், நடிகை கௌதமி புகார் தொடர்பாக விசாரித்தார். இந்த விவகாரத்தில் அழகப்பன், அவரது மனைவி நாச்சியாள், நில புரோக்கர் நெல்லியான், ஜோசப் ஜெயராஜ், பாக்கியசாந்தி, ஜெயபாலன், சந்தான பீட்டர், அழகப்பன் மகன்கள் சொக்கலிங்கம், அழ அழகப்பன், ஆர்த்தி அழகப்பன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மோசடி பணம் எவ்வளவு, எப்படி நடந்தது.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications