மீன்பிடி தடைகால நிவாரணம் ரூ.8000ஆக உயர்த்தி வழங்கப்படும்: 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இன்று நடைபெற்று வரும் மீனவர் சங்க மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மீனவர்கள் நலனுக்காக 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தாக்குதலுக்கு மோடியின் பலவீனமான ஆட்சியே காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.
முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரத்தில் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் மாலை மதுரை வந்த அவர், சாலை மார்க்கமாக நேற்று பிற்பகலில் ராமநாதபுரத்தை அடைந்தார். அங்குள்ள அரசு விடுதியில் ஓய்வெடுத்த முதல்வர் ஸ்டாலின், பேராவூரில் நடைபெற்ற திமுக தென் மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சிப் பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இன்று காலை மண்டபம் முகாம் அருகில் உள்ள விமான தளத்தில் நடைபெறவுள்ள மீனவர் சங்க மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதில், 178 மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அப்போது அரசு சார்பில் மீனவர்களுக்கு உதவித்தொகை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன், இலவச பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இன்றைய மாநாட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் 4,184 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா ரூ.24 கோடியே 26 லட்சத்து 28 ஆயிரத்து 315 மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் 1,299 பயனாளிகளுக்கு மானியத்தில் படகு கட்டுதல் மற்றும் (பி.எம்.எம்.எஸ்.ஒய்) நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன.
6 ஆயிரத்து 608 பெண்களுக்கு மகளிர் நலத்திட்டங்கள் உள்பட மொத்தம் 13 ஆயிரத்து 244 பயனாளிகளுக்கு ரூ.70 கோடியே 76 லட்சத்து 32 ஆயிரத்து 609 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
மேலும், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படுவதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்களும் தொடர்ந்து வரும் நிலையில், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பலரும் வலியுறித்தி வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அத்துமீறல்கள் குறித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மூக்கையூர் மீன்பிடி துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தை மேம்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், தங்கச்சிமடத்தில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் மீனவர்கள் முன்வைத்துள்ளனர். அதுகுறித்தும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிடலாம் எனத் தெரிகிறது.
மீனவர் சங்க மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். 45,000 மீனவர்களுக்கு கூட்டுறவு கடன் வழங்கப்படும். மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் 5,035 வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்" என அறிவித்துள்ளார். மீனவர் சங்க மாநாட்டில் மீனவர்கள் நலனுக்காக 10 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும், "கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம், கடல் அரிப்பை தடுக்க, படகுகளை பாதுகாக்க தூண்டில் வளைவுகள் அமைத்துக் கொடுத்துள்ளோம். ஆண்டுக்கு விசைப்படகுக்கு டீசல் 18,000 லிட்டர், நாட்டுப்படகுகளுக்கு 4,000 லிட்டர் விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது." என்றார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "2014ல் மத்தியில் ஆட்சி மாற்றம் வந்த பிறகு மீனவர்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை படையினர் தாக்குவது தொடர்கதையாகியுள்ளது. மோடி ஆட்சி பலவீனமாக இருப்பதால் இலங்கை அத்துமீறல் தொடர்கிறது" என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications