தமிழக மீனவர்களை கடத்தல்காரர்கள் என சொன்னாரா பாஜக அண்ணாமலை? ராமநாதபுரத்தில் பேசியதுதான் என்ன?
ராமநாதபுரம்: தமிழ்நாட்டு மீனவர்கள் போர்வையில் சில சமூக விரோதிகள் கடத்தலில் ஈடுபடுகின்றனர்; அவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்கின்றனர் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராமநாதபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: மீனவர்கள் பிரச்சனை குறித்து சந்தித்து பேசுவதற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், வரும் 10-ந் தேதிக்குப் பின்னர் நேரம் கொடுத்துள்ளார். மார்ச் 10-ந் தேதி முதல் மார்ச் 15-ந் தேதிக்குள் மீனவர் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம்.

இலங்கையின் புதிய அதிபர் வந்தபிறகுதான் அதிகமான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன; மன்னார் பக்கம் போனாலும் பிடிக்கிறாங்க.. கன்னியாகுமரி பக்கம் போனால் சர்வதேச கடல் எல்லையை தாண்டியதாக கைது செய்கிறார்கள்.
இலங்கையில் ஜாமீன் நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதை ஆக்ரோஷமாக பாஜக சார்பில் கடிதம் எழுதினோம். இதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் எழுதி இருக்கிறார். அதில், பிரதமரும் தாமும் இலங்கையிடம் கடுமையாக பேசினோம்; மீனவர்கள் பிரச்சனையை மனிதாபிமான பிரச்சனையாக பார்க்க வேண்டும்; சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகவோ, சர்வதேச எல்லை பிரச்சனையாகவோ பார்க்கக் கூடாது என சொல்லப்பட்டுள்ளது; ஆகையால் இலங்கையின் கைது நடவடிக்கைக்கு முடிவு எடுக்க இருக்கிறோம் என கூறியிருக்கிறார்.
தமிழக மீனவர்கள் ரொம்ப நல்லவங்க.. அவங்க மேல தவறு எதுவும் இல்லை. அவங்க நல்லபடியாக போய்ட்டு வருகிறார்கள்.. சில சமூக விரோதிகள்,மீனவர்கள் போர்வையில் கடத்தல் செய்கிறார்கள். அதை கடலோர காவல்படை பிடிக்கிறது; அதையும் நாம் இல்லை என மறுக்க முடியாது.
மீனவ சொந்தங்கள் பாவம், 200 ஆண்டுகாலமாக எப்படி மீன்பிடித்தார்களோ அதே போல மீன்பிடிக்கிறாங்க.. இந்த பார்டர் லைன் என்பது 1970-ல் வந்தது. அந்த தீவை கொடுத்த பிறகுதான் வந்தது.
ஆனால் சில சமூக விரோதிகள் இதனைப் பயன்படுத்தி தூண்டியும் விடுகின்றனர். அதுவும் உண்மைதான். அதை நம்முடைய கடலோர காவல்படை கட்டுப்படுத்த வேண்டும். நம்ம பகுதியைச் சேர்ந்தவர்கள் அப்படி யாராவது செய்தால் இங்கேயே தடுத்து நிறுத்த வேண்டும் என கடலோர காவல் படையினரை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறனார்.
ஆனால் தமிழக மீனவர்களை கடத்தல்காரர்கள் என அண்ணாமலை கூறிவிட்டதாக தகவல்கள் பரவியது. தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களையும் இது கொந்தளிக்க வைத்தது. இதனால் அண்ணாமலைக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அண்ணாமலையின் பேச்சு வேறுவிதமாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் தரப்பட்டதால் அத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்படவிலை என்கின்றனர் மீனவர் சங்கத்தினர்.












Click it and Unblock the Notifications