பாலியல் புகார்.. ராமநாதபுரத்தில் விசாரணையை தொடங்கிய போலீஸ்.. நெஞ்சை பிடித்து உயிரைவிட்ட ஹெச்.எம்
ராமநாதபுரம்: சாயல்குடி அருகே அரசுப்பள்ளி மாணவிகளுக்கு தலைமையாசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் புகார் கொடுத்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமையாசிரியர் மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்படவிருந்த நிலையில், அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் என்று அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் பாலியல் வன்கொடுமை புகாரில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராமநாதபுரத்தில் பாலியல் தொல்லை புகார் தொடர்பான விசாரணைக்கு பின் தலைமையாசிரியர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறை தயார் நிலையில் இருந்தனர். முதல்நாள் விசாரணை முடிவடைந்த பின், 2வது நாள் எஃப்ஐஆர் போட முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், திடீரென தலைமையாசிரியர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா மேலமுந்தல் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு மாரியூரைச் சேர்ந்த சேட் ஆயூப்கான் என்பவர் தலைமையாசிரியராக செயல்பட்டு வந்திருக்கிறார்.
அப்போது அந்த பள்ளியில் படித்த மாணவிகளுக்கு தலைமையாசிரியர் சேட் அயூப்கான் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் கூறி இருக்கின்றனர். இதன்பின் உடனடியாக பெற்றோர் தரப்பில் ராமநாதபுரம் குழந்தைகள் நல அலுவலக உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று கீழக்கரை அனைத்து மகளிர் காவல்துறையினர் மற்றும் வட்டார கல்வித்துறை அதிகாரிகள் பெற்றோர் மற்றும் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணை இன்று அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தலைமையாசிரியர் சேட் அயூப்கான் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தலைமையாசிரியர் சேட் அயூப்கான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications