தவசி துண்டு இனி தவறாது.. ‘நிரந்தரமா’ சவுத் கேப்சர்.. எடப்பாடி டீமுக்கு ஷாக்.. மாஸ் காட்டிய ஓபிஎஸ்!
ராமநாதபுரம் : தங்கக் கவசம் கையை விட்டுப் போனதால், வெள்ளிக் கவசம் அணிவிக்க ஓபிஎஸ் தயாராகி வருவதாக நேற்று நம் 'ஒன் இந்தியா தமிழ்' தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி, 10.4 கிலோ எடையில் வெள்ளிக் கவசம் அணிவிக்க இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆண்டு தோறும் மதுரையில் உள்ள வங்கி லாக்கரில் இருக்கும் தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் பசும்பொன்னில் வழங்குவார்.
தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் காரணமாக மாவட்ட நிர்வாகத்திடம் தேவர் தங்கக் கவசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் தான், அதிரடியாக, தன் சார்பாக வெள்ளிக் கவசம் தயார் செய்து தேவர் சிலைக்கு அணிவிக்க இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஓபிஎஸ்ஸின் இந்த அதிரடி மூவ் எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இபிஎஸ்க்கு சமுதாய பாசம்! பசும்பொன்னை வைத்து முடிச்சு போடும் ஓபிஎஸ்! தலையைக் கவிழ்த்த மாஜிக்கள்!

தங்கக் கவசம் 2 பேர் கையிலும் இல்லை
அதிமுக பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் தான் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக சார்பாக வழங்கப்பட்ட தங்க கவசத்தை அணிவித்து வந்தார். தற்போது அதிமுகவில் நிலவும் உட்பட்சி பூசல் காரணமாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இரு தரப்பினரும், தேவர் தங்க கவசத்தை பெற முயற்சி செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் தங்கக் கவசத்தை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால், அதிமுக சார்பாக வழங்கப்பட்ட தங்கக் கவசம் தற்போது அரசின் பொறுப்பிற்குச் சென்றுள்ளது. இதேபோல 2017ஆம் ஆண்டிலும் மாவட்ட ஆட்சியர்கள் வசம் தங்கக் கவசம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் எடுத்த முடிவு
தேவர் தங்கக் கவச உரிமை தொடர்பான சிக்கல் ஏற்பட்டபோதே ஓபிஎஸ் தனக்கு நெருக்கமானவர்களிடம் இதுகுறித்து ஆலோசித்ததாக கூறப்பட்டது. ஒருவேளை தங்கள் தரப்புக்கு தங்கக் கவசம் கிடைக்காமல் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கிடைத்தால் என்ன செய்வது என்று ஓபிஎஸ் ஆலோசித்துள்ளார். அப்போதுதான் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளனர். அதிமுக சார்பாக வழங்கப்பட்ட தங்கக் கவசத்தைப் போலவே ஒரு வெள்ளிக் கவசத்தை தங்கள் குடும்பம் சார்பாகவே பசும்பொன் தேவர் சிலைக்கு அணிவிக்கலாம் என ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.

பன்னீர் பலே திட்டம்
ஜெயலலிதா இருந்தபோது நந்தனம் தேவர் சிலை அமைத்தது, பசும்பொன் தேவருக்கு தங்க கவசம் அளித்தது என முக்குலத்தோர் சமூக ஆதரவைப் பெற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அது தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பெரிய பலமாக இருந்தது. இப்போது தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் செல்வாக்குக்கு ஜெயலலிதா மேற்கொண்ட அந்த முயற்சிகளும் முக்கியமான காரணம். எனவே, செல்வாக்கைத் தக்கவைத்து முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவை நிலைநிறுத்த வெள்ளிக் கவசத்தை அளிக்கலாம் என ஓபிஎஸ் முடிவு செய்தார்.

நிரந்தரமாக
அதிமுக சார்பாக அளிக்கப்படும் தங்கக் கவசம் குருபூஜை நிகழ்வின்போது மட்டுமே அணிவிக்கப்படும். மற்ற நேரங்களில் வங்கியின் லாக்கரில் தான் வைக்கப்பட்டிருக்கும். தாங்கள் அளிக்கும் வெள்ளிக் கவசத்தை தேவர் நினைவிட காப்பாளரின் பொறுப்பிலேயே ஒப்படைத்து, ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளன்றும், மற்ற முக்கியமான நாட்களிலும் வெள்ளிக் கவசத்தை அணிவிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால், ஓபிஎஸ் வழங்கும் வெள்ளிக் கவசம் எப்போதும் பசும்பொன்னிலேயே இருக்கும்.

எடப்பாடி டீம் ஷாக்
அதிமுக தங்கக் கவசத்தை அணிவிக்கும் உரிமையை தான் தற்காலிகமாக இழந்தாலும், தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை இழக்காமல் காப்பாற்றிக் கொண்டுள்ளார் ஓபிஎஸ். எடப்பாடி பழனிசாமி தரப்பு தென் மாவட்டங்களில் பலம் பெற ஆர்பி உதயகுமாரை முன்னிறுத்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கெல்லாம் இந்த வெள்ளிக் கவசம் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் ஓபிஎஸ். ஓபிஎஸ்ஸின் இந்த அதிரடி நடவடிக்கையால் எடப்பாடி தரப்பு ஷாக் ஆகியுள்ளது.

ஓபிஎஸ் டீம் உற்சாகம்
தென் மாவட்டங்களில் தன் வலிமை அதிகரிக்க எடப்பாடி பழனிசாமி என்னென்னமோ செய்து பார்த்தார். ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் ஆதரவை அசைக்க முடியவில்லை, கடைசியில் தங்கக் கவசமும் யாருக்கும் கிடைக்கவில்லை, எடப்பாடியால் பசும்பொன்னுக்கே வர முடியவில்லை. தங்கக் கவசம் கிடைக்காவிட்டாலும், வெள்ளிக் கவசத்தை தன் கையாலேயே வழங்கி, முக்குலத்தோர் சமூகத்தினர் மத்தியில் தனது பெருமையை நிலைநாட்டியுள்ளார் ஓபிஎஸ் என உற்சாகமாகக் கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.