2 சமூகங்கள் இடையே வெறுப்பை தூண்டும் பதிவு.. பரமகுடி மதனை தூக்கிய போலீஸ்! நெட்டிசன்களுக்கு வார்னிங்
ராமநாதபுரம்: இரு சமுதாயத்தினருக்கு மத்தியில் பிரச்சனையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வாசகங்களை பதிவேற்றம் செய்த பரமகுடியை சேர்ந்த மதன் விக்னேஷ் என்ற நபரை போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்து உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இரு சமுதாயத்தினருக்கு இடையே ஏற்கனவே பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் பரமக்குடியை அடுத்து உள்ள கமுதக்குடியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் மதன் விக்னேஷ் (வயது 25) என்பவர் இது தொடர்பாக மேலும் பிரச்சனையை தூண்டும் வகையில் வாசகங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து இருக்கிறார்.

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த நிலையில் மதன் விக்னேஷ் மீது பிணையில் விடமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் இரு சமூகத்தினர் மத்தியில் பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக வாசகங்களை பதிவு செய்த மதன்விக்னேஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து ராமநாதபுரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தெரிவித்துள்ளதாவது, "இது போன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூகவலைதளங்கள் மூலம் வன்முறையை தூண்டும் விதமாகவோ, இரு சமுதாயத்தினருக்கு இடையே பிரச்சனை ஏற்படுத்தும் விதமாகவோ தகவல்களை பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்." என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் தொடர்ந்து மதம், சாதி, மொழி சார்ந்து அவதூறான வெறுப்பை பரப்பும் பதிவுகள் அதிகரித்து வருகின்றன. வட மாநிலங்கள் தொடங்கி கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு வரை நாடு முழுவதும் சமூக வலைதள வெறுப்பு பிரச்சாரங்களின் காரணமாக வன்முறை சம்பவங்களும், மோதல்களும் ஏற்பட்டு உள்ளன.
இதனை கட்டுப்படுத்த காவல் துறை நடவடிக்கை எடுத்து வந்தாலும், அது ஓய்ந்தபாடில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலமாகவே சாதி, மத வெறுப்பு பிரச்சாரங்களை தடுக்க முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அதே சமயம், கட்சிகளின் முக்கிய பொறுப்புகளில் இருந்துகொண்டு இதுபோல் சமூக வலைதளங்களில் பதிவிடுவோரை பின்பற்றியே இளைஞர்களும், சாதாரண மக்களும் இதுபோன்ற சர்ச்சை பதிவுகளை வெளியிடுகிறார்கள். அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications