ஏர்வாடி தர்கா சந்தனக் கூடு திருவிழா..சாதி மத பேதமின்றி தரிசித்த மக்கள்..ராமநாதபுரத்தில் விடுமுறை
ராமநாதபுரம்: ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் தர்ஹாவின் 849ஆம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழாவில் ஜாதி மதபேதமின்றி அனைத்து சமுதாயத்தினரும் திரளாக கலந்து கொண்டனர். சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு இன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏர்வாடி தர்கா புண்ணிய தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஏர்வாடியில் மகான் சுல்தான் சையது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் கேரளா , கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு 849 வது ஆண்டின் சந்தனக்கூடு திருவிழா கடந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்கியது.

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இத்தலத்திற்கு நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமானோர் வந்து தங்கி சிறப்பு வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வேண்டினால் பூரண குணமடைந்து செல்வார்கள் என்பதை ஐதீகமாக கொண்டுள்ளனர். இத்தலத்தின் சந்தனக் கூடு திருவிழா மிகவும் பிரபலமானது.
பாதுஷா நாயகத்தின் 849ம் ஆண்டு சந்தனக் கூடு திருவிழா மவ்லீது ஷரீப்புடன் ஆரம்பமானது. மவ்லீது ஷரீப் தொடர்ந்து 23 நாட்கள் நடைபெற்றது. நேற்று மாலை சந்தனக் கூடு துவங்கி இன்று அதிகாலை சந்தனக் கூடு ஊர்வலம் வந்து புனித சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெற்றது.
பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். 19ஆம் தேதி கொடியிறக்கத்துடன், யாத்ரீகர்களுக்கு நேர்ச்சை வழங்கப்பட்டு விழா நிறைவு பெறும். இந்த விழாவில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வதால் தர்கா பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் எஸ்.முகம்மது பாக்கிர் சுல்தான் தலைமையில், செயலாளர் எஸ்.செய்யது சிராஜ்தீன், துணை தலைவர் ஜெ.சாதிக் பாட்சா மற்றும் ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா நடைபெறுவதை முன்னிட்டு வருகிற இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டதன் காரணமாக இதற்கு பதிலாக 24 ஆம் தேதி வேலை நாளாக மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சந்தனக்கூடு நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் கேரளா முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலத்தில் இருந்தும் ஏராளமான இந்து சமுதாய மக்களும் கலந்துகொண்டனர். மக்கள் வசதிக்காக ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரையில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் ஏர்வாடிக்கு இயக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications