பட்டா வழங்காத ராமநாதபுரம் தாசில்தார்.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பெரிய ட்விஸ்ட்.. கோர்ட் அதிரடி
ராமநாதபுரம்: அரசு ஊழியர்கள் சரியாக வேலை செய்யாமல் பொதுமக்களை அலைய வைத்தால், உயர் அதிகாரிகளிடம் முறையிடலாம். அதேநேரம் உயர் அதிகாரிகள் அலைய வைத்தால் அதற்கு மேல் உள்ள அதிகாரிகளிடம் முறையிடலாம். அதேநேரம் பட்டா வாங்குவதற்கு அலையவிட்ட தாசில்தாருக்கு எதிராக என்ஜினியர் ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தாசில்தாருக்கு 35000 அபராதம் விதித்து உத்தரவிட்டிருப்பது தான் முக்கியமான விஷயம் ஆகும்.
இன்றைக்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு அலையவே தேவையில்லை. தனிப்பட்டா உள்ள நிலத்தினை உங்கள் பெயரில் வாங்கினால், தானியங்கி முறையில் பட்டா மாறிவிடும். அதேநேரம் தந்தை பெயரில் உள்ள நிலம், உறவினர்கள் பெயரில் உள்ள நிலம். கூட்டு பட்டா உள்ள நிலம், பல காலம் முன்பு வாங்கிய நிலத்திற்கு இப்போது பட்டா கேட்டு சென்றால், அதற்கு முறையாக விண்ணப்பிக்க முடியும். இ சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இ சேவை மையம் மூலம் உங்கள் மனு உரிய அதிகாரிகளாக விஏஓ, சர்வயேர், தாசில்தாருக்கு போகும். விஏஓ உங்கள் நிலத்தின் வகை பற்றி சோதிப்பார்.

பின்னர் நில அளவையர் நிலத்தின் அளவும், பத்திரத்தின் அளவு சரியாக உள்ளதா என்று நேரில் போய் ஆய்வு செய்வார். இவர்கள் இருவரும் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் தான் தாசில்தார் பட்டா வழங்குவார். ஏதேனும் சந்தேகம் இருந்தால் தாசில்தார் திருப்பி அனுப்பிவிடுவார்.. இந்த மூன்று நிலைகளில் ஏதேனும் ஒரு நிலையில் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களும் இருக்கிறார்கள். எல்லா ஊழியர்களும் கேட்பது இல்லை.
ஒரு சில ஊழியர்கள் பட்டா வழங்க லஞ்சம் கேட்பது நடக்கிறது. சில இடங்களில் புரோக்கர்கள் கட்டாய லஞ்ச வசூலுக்கு ரெடியாவதும் நடக்கிறது. அதேநேரம் சில இடங்களில் எல்லாம் சரியாக இருந்தாலும் பட்டா கிடைப்பது இல்லை. ஏதேனும் சிக்கல்கள் இருந்திருக்கும். அதனை முறைப்படி பட்டா பெயர் மாற்றம் கோருபவர்களுக்கு தகவல் தருவது இல்லை. இப்படியான நிலையில் பட்டா பெயர் மாற்றத்திற்காக அவர் அலைந்து கொண்டே இருப்பார். அப்படி அலைந்த ராமநாதபுரம் இன்ஜினியர் கடைசியில் நீதிமன்றத்தில் முறையிட்டார். அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ள காட்டூரணி வைகை நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருடைய மகன் மதன்யோகேஷ்க்கு 27 வயதுஆகிறது. இன்ஜினியரான இவரது பூர்வீக சொத்தை கோர்ட்டு மூலம் பாகப்பிரிவினை செய்யப்பட்ட நிலையில் தனக்குரிய பங்கு நிலத்திற்கு பட்டா வழங்கக்கோரி மதன் யோகேஷ் ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 2023-ல் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் உள்ளிட்டோர் காலதாமதம் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இதற்காக அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதும் எந்த விசாரணையும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து மதன் யோகேஷ் ராமநாதபுரம் நுகர்வோர் கோர்ட்டில் நீதி கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நுகர்வோர் கோர்ட் நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று என்ஜினீயர் மதன் யோகேஷிற்கு பட்டா வழங்காமல் காலதாமதம் மற்றும் மன உளைச்சலுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடும், வழக்கு உள்ளிட்ட இதர செலவுகளுக்கு ரூ.10 ஆயிரமும் என ராமநாதபுரம் தாசில்தாருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
