ஷீலாவோடு சங்கராவை அள்ளிய ஜனம்.. வஞ்சித்த வஞ்சிரம்.. ராமநாதபுரத்தில் ரக ரகமாக துள்ளிய மீன்கள்.. குஷி
ராமநாதபுரம்: மீன்பிடி தடைக்காலம் நீங்கியதையடுத்து, தமிழகம் முழுவதும் மீன்கள் விலை பரவலாக குறைந்துவருகிறது.. இது மீன்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
மீன்பிடி தடை காலம் அமலில் இருந்ததால், மீன்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டது.. நாகப்பட்டினம், ராமேஸ்வரன், காரைக்கால், தூத்துக்குடி, கேரளா போன்ற பகுதிகளிலும் குறைவான ஆழத்திலேயே மீன்கள் பிடிக்கப்பட்டு வந்தன. இதனால், மீன் மார்க்கெட்டுகளுக்கு வரத்தும் குறைந்து, விலையும் உயர்ந்து காணப்பட்டன.

காசிமேடு: இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் நீங்கியதையடுத்து, கடந்த 2 வாரங்களாக மீனவர்கள் கடலில் மீன்களை பிடித்து வருகிறார்கள்.. கடந்த ஞாயிற்றுக்கிழமைகூட, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அதிக அளவில் மீன்கள் வந்து குவிந்தன.. பல்வேறு வகையான மீன்களின் வரவால், விலையும் குறைந்திருந்தது. அதாவது, கடந்த வாரத்தைவிட, இந்த வாரம் விலை குறைந்துள்ளதாக, மீன் வியாபாரிகள் கூறியிருந்தனர்.
இதையடுத்து, சங்கரா, நெத்திலி, கருப்பு வவ்வால், கொருக்கை, பாறை, சீலா, திருக்கை, தட்டை மீன், புலி இறால் ஆகியவை துறைமுகத்தில் வந்திறங்கியதால், மீன் பிரியர்களும் அதிகமாக மீன்களை வாங்கி சென்றனர்.
சூரை மீன்கள்: மீன்பிடிக்கச் சென்ற படகுகள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பினாலும், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் இன்னும் மீன்பிடித்துக்கொண்டு கரை திரும்பவில்லையாம். காசிமேட்டில் இருந்து ஏராளமான சூரை மீன்பிடி படகுகளும் மீன்பிடிக்க சென்றுள்ளதால், இந்த ஆழ்கடல் மீன்பிடி படகுகள், 10 நாட்களுக்கு மேல் கடல் நீரில் தங்கியிருந்து, அதன்பிறகே காசிமேடு வந்து சேரும் என்றார்கள் வியாபாரிகள்.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது, வியாபாரிகளை கவலைகொள்ள செய்துள்ளது.. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு துறைமுகத்தில் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 1,500-க்கும் அதிகமாக மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
பாறை மீன்கள்: இவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று பாம்பன் கரை திரும்பினார்கள்... அப்போது வவ்வால் மீன், சீலா, பாரை மீன், மாஊழா உள்ளிட்ட பலவகை மீன்கள் சிக்கியிருந்தன.. எதிர்பாராத விதமாக அதிகளவில், அதுவும் வகைவகையான மீன்கள் கிடைக்கவும், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கட்டா, நகரை, கடவுறால், முண்டக்கன்னி, பாறை மீன்கள் அதிகமாக கிடைத்திருக்கின்றன..
ஒரு கிலோ வவ்வால் மீன் 280 ரூபாய் விற்ற நிலையில், இப்போது 250 ரூபாய் விற்பனையாகிறது.. பாறை மீன் 300 ரூபாய் விற்கப்பட்ட நிலையில், இப்போது 280 ரூபாய் விற்கப்படுகிறது.. மாஊழா 180 ரூபாய், புள்ளி திருக்கை 110 ரூபாய் என எல்லா வகை மீன்களுமே விலை குறைந்து விற்கப்பட்டு வருகிறது.
மீன்கள் வரத்து: கடவுறால் ரூ.300, நகரை ரூ.150, முண்டக்கன்னி ரூ.150, கட்டா ரூ.250 பாறை மீன் வகை ரூ.320 முதல் ரூ.350 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மொத்தத்தில், கிலோவுக்கு 20 முதல் 40 ரூபாய் வரை விலை குறைந்ததால், மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஷீலா மீன் மட்டும் விலை குறையாமல் கிலோ 800 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கியிருக்கிறார்கள்.. வஞ்சிரம் மீன் சிறிய வகையில் வந்ததால் கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை ஆகின்றதாம்.
மகிழ்ச்சி: ராமேஸ்வரம் போலவே, கேரளா, கோவை, சேலம் உள்ளிட்ட பல நகரங்களில் மீன் விற்பனை சூடு பிடிக்காததால் விலை குறைந்ததாக வியாபாரிகள் கவலை தெரிவித்திருக்கிறார்கள. ஆனால், ரகம் ரகமாக மீன்கள் கிடைத்துள்ளதுடன், விலையும் குறைந்துள்ளதால், மீன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications