"இன்னைக்கு ஒரு பிடி.." 101 கிடா, 50 கிராம இளைஞர்கள்! கமுதியில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட மாபெரும் கிடா விருந்து திருவிழா நடைபெற்றது.
இந்தாண்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் இந்த முறை எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் மாநிலத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளிலும் நீர் இருப்பு குறைவாகவே இருக்கிறது.

இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். போதியளவில் மழை இல்லை என்றால் இந்த முறை தங்களால் விவசாயமே செய்ய முடியாது என்று விவசாயிகள் பலரும் வேதனை தெரிவிக்கிறார்கள்.
மழை வேண்டி பூஜை: இதற்கிடையே மாநிலத்தில் மழை பெய்ய வேண்டும் என்பதற்காகப் பலரும் பலவித சிறப்புப் பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகளைச் செய்வது வழக்கம். தமிழகத்தில் பல இடங்களில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும். குறிப்பாகக் கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் தொடங்கிப் பல வழிகளில் மழை வேண்டி பிரார்த்தனைகள் தமிழ்நாட்டில் நடக்கும். இதற்கிடையே அப்படியொரு வினோதமான பூஜை தான் இப்போது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நடந்துள்ளது
கமுதி அருகே மழை பெய்ய வேண்டி நள்ளிரவில் காட்டுப் பகுதியில் குவிந்த ஆண்கள் பூஜை செய்தனர். இதற்காக 101 ஆடுகளைப் பலியிட்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர். மேலும், பூஜையில் கலந்து கொண்ட ஆண்களுக்காக அதிகாலையில் அசைவ விருந்தும் அளிக்கப்பட்டது.
சிறப்புப் பூஜை: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு என்ற கிராமம் உள்ளது. மாநிலத்தில் மற்ற பல பகுதிகளைப் போலவே இந்த கிராமம் மற்றும் இதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போதியளவில் இந்தாண்டு மழை பெய்யவில்லை. இங்கே மழை பெய்யவில்லை என்றால் மழைக்கு வேண்டி ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு மழை வேண்டி கிடா விருந்துடன் கூடிய சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
முதல்நாடு கிராமத்தில் விவசாயப் பணிகளுக்குச் சரியான நேரத்தில் மழை பெய்ய வேண்டி, எல்லைப் பிடாரி அம்மனுக்கு மண் பீடம் அமைத்து இந்த சிறப்புப் பூஜை நடைபெற்றது. காட்டுப் பகுதியில் நடந்த இந்த வினோத வழிபாட்டில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் மூன்றாவது வார புரட்டாசி சனிக்கிழமை நடைபெறும் இந்த திருவிழா, இந்தாண்டும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
101 கிடாக்கள்: இதில் கலந்து கொண்ட ஆண்கள் பயிர்களுக்கு மழை பெய்ய வேண்டியும் இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயிகளைப் பாதுகாத்திட வேண்டியும் பூஜை செய்தனர். இதற்காக நள்ளிரவில் அங்குத் திரண்ட ஆண்கள் சிறப்புப் பூஜை செய்தனர். மேலும், 101 கிடா ஆடுகளையும் பலியிட்டு எல்லைப் பிடாரி அம்மனுக்கு படையல் இட்டனர். அதைத் தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட ஆண்களுக்குப் பிரசாதமாகக் கறி விருந்தும் நடைபெற்றது.
ஆட்டுக் கிடாவை கைக்குத்தல் அரிசிச் சாதத்துடன் உருண்டைகளாக பிடித்து அதை அப்படியே சாமிக்குப் படைத்தனர். எல்லைப்பிடாரி அம்மனுக்கு பூஜைகள் முடிந்தபிறகு சாத உருண்டைகளில் கறிக் குழம்பைச் சேர்த்து உண்டனர்.
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த வினோத வழிபாட்டில் கமுதி சுற்று வட்டார 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். இங்கிருந்த எந்தவொரு பொருட்களையும் பெண்கள் பார்க்கக் கூடக் கூடாது என்பதால் மீதியிருந்த உணவு, பூஜை பொருள்களை அங்கேயே குழி தோண்டியும் புதைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications