சவுதி மார்க்கெட்டில் கால் பதிக்குமா டெஸ்லா?பர்சனல் பகையை தள்ளி வைத்த எலான் மஸ்க்!திடீர் மாற்றம் ஏன்?
ரியாத்: சவுதிக்கும் எலான் மஸ்கிற்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த மோதல் ஒருவழியாக இப்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இப்போது சவுதி மார்க்கெட்டில் நுழைகிறது. சர்வதேச சந்தையில் டெஸ்லா நிறுவனம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் சூழலில் சவுதி மார்க்கெட் டெஸ்லாவுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
உலகின் முன்னணி மின்சார கார் நிறுவனங்களில் ஒன்றான டெஸ்லா கடந்த சில காலமாகவே பல்வேறு அழுத்தங்களைச் சந்தித்து வருகிறது. ஒருபக்கம் அரசியல் நிலைப்பாட்டால் அமெரிக்காவில் டெஸ்லா விற்பனை சரிகிறது. ஐரோப்பிய ஒன்றியம் டெஸ்லாவை வாங்கத் தயக்கம் காட்டுகிறது. சீனா மார்க்கெட்டில் போட்டி அதிகம் இருப்பதால் டெஸ்லாவால் கால் பதிக்க முடியவில்லை. இதனால் டெஸ்லா விற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது.

சவுதி அரேபியா
இதன் காரணமாகவே உலகின் மற்ற மார்க்கெட்களில் கால்பதிக்க வேண்டிய கட்டாயத்தில் எலான் மஸ்க் இருக்கிறார். இந்தச் சூழலில் தான் நீண்ட இழுபறிக்குப் பிறகு சவுதி அரேபியாவில் டெஸ்லா கால் பதித்துள்ளது.. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே சவுதி அரேபியாவில் நுழைய டெஸ்லா முயன்றது. இருப்பினும், அப்போது சில காரணங்களால் அது நடக்காத நிலையில், இப்போது ஒரு வழியாக டெஸ்லா சவுதி அரேபியா மார்க்கெட்டில் நுழைகிறது.
கடந்த ஏப்ரல் 11ம் தேதி ஒரே நேரத்தில் ரியாத், ஜெட்டா மற்றும் தம்மாமில் டெஸ்லா தனது ஷோரூம்களை திறந்துள்ளது. கச்சா எண்ணெய் பயன்பாடு சர்வதேச அளவில் குறைந்து வரும் சூழலில், அதில் இருந்து தனது பொருளாதாரத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக விஷன் 2030 என்ற முன்னெடுப்பை சவுதி எடுத்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் தான் டெஸ்லாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா கார்கள்
மத்திய கிழக்கில் சவுதியில் மட்டுமே டெஸ்லாவால் கார்களை விற்க முடியாத சூழல் இருந்தது. சவுதி அரசுக்கும் எலான் மஸ்கிற்கும் இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே இதற்குக் காரணமாக இருந்தது. ஆனால் டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்கிற்கு முக்கியத்துவம் தரப்பட்ட பிறகு மோதல்கள் குறைந்தது. சவுதி மார்க்கெட்டில் டெஸ்லா நுழைந்துள்ளது இப்போது அந்தச் சிக்கல் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டதையே இது காட்டுகிறது.
சவுதி டெஸ்லாவுக்கு அனுமதி அளித்துள்ள இந்த நேரமும் முக்கியமானதாகவே கருதப்படுகிறது. ஏனென்றால் அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக சவுதிக்கு செல்லவிருக்கிறார். அதேபோல அமெரிக்காவில் அடுத்த 4 ஆண்டுகளில் ஒரு டிரில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்திருந்தது. இந்தச் சூழலில் தான் டெஸ்லாவுக்கு சவுதி அனுமதி அளித்துள்ளது.
டெஸ்லா முன் இருக்கும் சவால்கள்
சவுதியில் இப்போது விற்பனையாகும் கார்களில் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே மின்சார கார்களாக உள்ளன. இதனால் டெஸ்லா அந்தச் சந்தையை விரிவுபடுத்தி விரும்புகிறது. அதேநேரம் சவுதியை பொறுத்தவரை அங்கு கார்களில் சொகுசு வசதிகளை அதிகம் எதிர்பார்ப்பார்கள். அதைத் தேவையை டெஸ்லா பூர்த்தி செய்யுமா என்பது கேள்வியாகவே இருக்கிறது.

டெஸ்லா- சவுதி கடந்து வந்த பாதை
ஜூலை 2018 - சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியம் சுமார் $2 பில்லியன் மதிப்பு கொண்ட டெஸ்லாவின் 5% பங்குகளை வாங்கியது. அதன் தொடர்ச்சியாக டெஸ்லாவை முழுமையாக பிரைவேட் லிமிடட் நிறுவனமாக மாற்றுவது தொடர்பாக $72 பில்லியன் மதிப்பிலான டீல் குறித்து சவுதி அதிகாரிகளை எலான் மஸ்க் சந்தித்துப் பேசினார்.
ஆகஸ்ட் 2018 - பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருந்த டெஸ்லா நிறுவனம் முழுமையாக பிரைவேட் லிமிடட் நிறுவனமாக மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக எலான் மஸ்க் ட்வீட் செய்தார். அப்போது வர்த்தகமான விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு, ஒரு பங்கு 420 டாலர் கொடுத்து வாங்கப்படும் என்பது போல எலான் மஸ்க் அறிவித்தார்.
இருப்பினும், கொஞ்ச நேரத்திலேயே தேவையான நிதி கிடைக்கவில்லை என எலான் மஸ்க் அறிவித்தார். இதனால் டெஸ்லா பங்குகள் வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. எலான் மஸ்க் வேண்டுமென்றே டெஸ்லா மதிப்பை ஏற்ற இதுபோல செய்ததாகச் சொல்லி முதலீட்டாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
எலான் மஸ்க் கோபம்
செப்டம்பர் 2018 - எலான் மஸ்க் செய்தது தவறு என அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கூறியது. மேலும், எலான் மஸ்க்கை டெஸ்லா தலைவர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என வலியுறுத்தியது. இது ஒரு பக்கம் இருக்க டெஸ்லாவை தனியார்மயமாக்கும் பிளானை எலான் மஸ்க் கைவிட்டார். கலிபோர்னியாவை சேர்ந்த லூசிட் மோட்டார்ஸ் என்ற மற்றொரு நிறுவனத்தில் சவுதி பொது முதலீடு நிதியம் $1 பில்லியன் முதலீடு செய்தது.
அக்டோபர் 2018 - டெஸ்லா தலைமைப் பதவியில் இருந்து விலகிய எலான் மஸ்க், $20 மில்லியன் அபராதமும் செலுத்தினார்.
இதே காலகட்டத்தில் தான் அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் சவுதி அரேபிய அரசைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்த வந்தவருமான ஜமால் கஷோகி என்பவர் இஸ்தான்புல்லில் வைத்துக் கொல்லப்பட்டார். சவுதி அரேபியா ஏஜெண்டுகள் நடத்திய அங்கீகரிக்கப்படாத ஆக்ஷனில் அவர் உயிரிழந்ததாக சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், இதை மறுத்த துருக்கிய அதிகாரிகள் சவுதி தலைமை உத்தரவின் பெயரிலேயே ஜமால் கொல்லப்பட்டதாகப் பரபர குற்றச்சாட்டை முன்வைத்தது.

உச்சத்தில் மோதல்
நவம்பர் 2018 - கஷோகியின் மரணம் குறித்து அறிந்த பிறகு சவுதி நிதியைப் பெற மாட்டேன் என்று எலான் மஸ்க் அறிவித்தார்.
2019-2020 - இந்தக் காலகட்டத்தில் தான் சவுதி பொது முதலீடு நிறுவனம் தனது டெஸ்லா பங்குகளை படிப்படியாக குறைத்தது. பிப்ரவரி 2020 காலகட்டத்தில் அதன் தன்வசம் இருந்த 8.2 மில்லியன் பங்குகளில் 99.5%ஐ விற்றுவிட்டது.
செப்டம்பர் 2023 - சவுதி அரேபியாவில் ஒரு மின்சார கார்கள் தொழிற்சாலையை அமைப்பது குறித்து டெஸ்லா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தி வால் ஸ்ட்ரீட் செய்தி வெளியிட்டது. இருப்பினும், அதை எலான் மஸ்க் திட்டவட்டமாக மறுத்தார்.
மெல்ல முடிவுக்கு வந்த மோதல்
டிசம்பர் 2023 - நிலைமை மெல்ல மாற தொடங்கியது. எலான் மஸ்க் மற்றும் சவுதி அதிகாரிகள் சவுதியில் டெஸ்லா ஆலையை அமைப்பது குறித்துச் சந்தித்துப் பேசினர்.
பிப்ரவரி 2024 - சவுதி அரேபியா அதன் விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியாக மின்சார கார்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்தது. இது டெஸ்லாவுக்கு சாதகமான நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது.
மார்ச் 2024 - சவுதி அரேபியாவில் தனது முதல் ஷோரூமை திறக்கவுள்ளதாக டெஸ்லா நிறுவனம் அறிவிப்பை வெளியிடுகிறது.
அக்டோபர் 2024 - ரியாத்தின் முதலீட்டு உச்சி மாநாட்டில் யாருமே எதிர்பார்க்காத சூழலில் எலான் மஸ்க் நேரில் கலந்து கொண்டு பேசுகிறார்.
ஏப்ரல் 2025 - சவுதி அரேபியாவில் டெஸ்லா ஷோரூமே அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications