நெருங்கும் லோக்சபா தேர்தல்! சேலத்தில் குவிந்த போலீஸ்+துணை ராணுவம்.. கொடி அணிவகுப்பு
சேலம்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை சார்பில் கருப்பூர் பகுதியில் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்றது .
நாடு முழுவதும் 18வது லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 16ஆம் தேதி தேர்தல் தேதியை அறிவித்தார் இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த ஆண்டும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 22 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழகமும் ஒன்று. தமிழகம் + புதுச்சேரி என 40 தொகுதிகளுக்கு ஏப்.19ம் தேதி வாக்கப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காவல்துறை மற்றும் துணை ராணுவம் சார்பில் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர காவல் துறை சார்பில் கருப்பூர் பகுதியில் சேலம் மாநகர காவல் துறையின் கொடி அணி வகுப்பு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் (வடக்கு) பிருந்தா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
வெள்ளாளப்பட்டி பகுதியில் தொடங்கிய இந்த பேரணி சந்தைப்பேட்டை, JJ நகர், கொல்லப்பட்டி வழியாக தேக்கம்பட்டி அரசு பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது.
இந்த பேரணியில் துப்பாக்கி ஏந்தியபடி 200க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு மற்றும் வீரபாண்டி என 6 சட்டமன்ற தொகுதியை, சேலம் லோக்சபா தொகுதி உள்ளடக்கியிருக்கிறது. இந்த 6 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 2021ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நான்கில் அதிமுகவும், 1 தொகுதியில் பாமக, 1 தொகுதியில் திமுக வெற்றி கொடி நாட்டியிருக்கிறது.
லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில், கடைசியாக கடந்த 1996ல்தான் திமுக இங்கு வெற்றி பெற்றது. அதற்கு பிறகு 23 ஆண்டுகள் கழித்து 2019 லோக்சபா தேர்தலில் இந்த தொகுதியை திமுகவின் எஸ்.ஆர்.பார்த்திபன் கைப்பற்றினார். இந்த முறை இங்கு 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் செல்வகணபதி, அதிமுக சார்பில் விக்னேஷ், பாஜவின் கூட்டணியில் உள்ள பாமக, அண்ணாதுரை என்பவரை களமிறக்கியுள்ளது. நாம் தமிழர் சார்பில் மனோஜ் குமார் என்பவர் களமிறக்கப்பட்டிருக்கிறார்.
அரசியல் களத்தை பொறுத்த வரையில், அதிமுக பலம் வாய்ந்ததாக இருக்கிறது. இருப்பினும், கடந்த முறை திமுக இங்கு வெற்றி பெற்றதாலும், இந்த முறை செல்வகணபதியை முதலமைச்சரே நேரடியாக செலக்ட் செய்ததாலும், வெற்றி நிச்சயம் என உடன்பிறப்புகள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். மறுபுறம், இந்த தொகுதி தனது சொந்த தொகுதி என்பதால் தனது பலத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி தீவிரமாக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.
1999 தொடங்கி 2019 வரை 20 ஆண்டுகளில் நடுவில் 5 ஆண்டுகளை தவிர்த்து, மீதி 15 ஆண்டுகள் இந்த தொகுதியை அதிமுகதான் தன் வசமாக வைத்திருந்தது. எனவே இந்த முறை வெற்றி எங்களுக்குதான் என ரத்தத்தின் ரத்தங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications