சேலம் அருகே தங்கத்தை விற்று பணமாக்க வந்த திருடன்.. இப்படி ஆகும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார்
சேலம்: சேலம் தாரமங்கலம் அருகே பாலிக்காடு பகுதியை சேர்ந்த பனைத்தொழிலாளி ராஜி என்பவரது வீட்டில் கடந்த மாதம் 15ம் தேதி 40 பவுன் தங்க நகையும், 3 லட்சம் பணமும் கொள்ளை போனது. இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் சங்ககிரியில் இருந்து தாரமங்கலம் நோக்கி வந்த காரை நிறுத்தி அண்மையில் போலீசார் சோதித்த போதுதான், ராஜி வீட்டில் திருடிய திருடன் சிக்கினான். அவரிடம் இருந்து 21 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சீராய்கடை பாலிக்காடு பகுதியை சேர்ந்த 45 வயதாகும ராஜி என்பவர் வசித்து வருகிறார்.இவர் பனைத்தொழிலாளியாவார். இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்க்ள். பனை தொழிலாளி ராஜியின் வீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி 40 பவுன் நகையும், ரூ.3 லட்சமும் கொள்ளை போனது. இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் போலீசார் நேற்று மூலக்கடை அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து தாரமங்கலம் நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். மேலும் காரில் இருந்த இளைஞரிடமும் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் எழுந்தது.
போலீசார் தீவிரமாக விசாரித்த போது, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வேடியரசன்பாளையம் பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் கோவிந்தசாமி (28) என்பதும், அவர் தான் பாலிக்காடு பகுதியை சேர்ந்த ராஜி வீட்டில் 40 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.
நகை, பணம் கொள்ளை வழக்கில் கைதான கோவிந்தசாமிக்கு சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் என்பதும், வாடகைக்கு கார் எடுத்து ஓட்டிய போது அவருக்கும், மதுரையை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவர் சுரேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்களாம்.
இந்த நிலையில் கோவிந்தசாமி அந்த கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜி வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்து சென்றார்களாம். பின்னர் அவர்கள் கோவிந்தசாமியிடம் ரூ.1 லட்சம் கொடுத்தார்களாம். மேலும் அவரிடம் 21 பவுன் நகையும் கொடுத்து அதை விற்று பணமாக மாற்றி கொடுக்குமாறு கூறினார்களாம். இதனால் அந்த நகையை விற்று பணமாக மாற்றுவதற்காக தர்மபுரிக்கு சென்ற போது போலீசாரிடம் கோவிந்தசாமி சிக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவிந்தசாமியிடம் இருந்து 21 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளையில் தொடர்புடைய சுரேஷ் உள்பட சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications