பாமக MLA-க்களுக்கு ஒரே நேரத்தில் உடல்நலக்குறைவு.. கூட்டு பிரார்த்தனை செய்வோம் எனக் கூறிய அன்புமணி!
சேலம்: பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, அருள் ஆகியோர் விரைவில் பூரண குணமடைய வேண்டும். அதற்காக நாம் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் - அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி ஆகியோர் இடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சிப் பொதுக் கூட்டத்தில் மோதல் வெளிப்படையாக தொடங்கியது. தனது மகள் வழிப் பேரன் முகுந்தனை பாமகவின் இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்தார்.

அன்புமணி - ராமதாஸ் மோதல்
இந்த அறிவிப்புக்கு அன்புமணி கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், தந்தை மகனுக்கு இடையிலான மோதல் மேடையிலேயே அம்பலமாகியது. இதைத்தொடர்ந்து, அன்புமணியை கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். உடனடியாக, தானே தலைவராகத் தொடர்வேன் என்றும் அன்புமணி அறிவித்தார்.
பின்னர், இருவரிடமும் பாமக தலைவர்கள், குடும்பத்தினர் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையிலும் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. அன்புமணி மீதும், அவரின் மனைவி சவுமியா மீதும் சரமாரியான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன் வைத்து வருகிறார். தனது மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை அளிக்க மாட்டேன் என்று ராமதாஸ் அண்மையில் தெரிவித்தார்.
மா.செக்கள் அன்புமணி பக்கம்
பாமக தலைவரான அன்புமணி பின்னால், 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். ராமதாஸ் இதுவரை 73 மாவட்ட செயலாளர்கள், 57 மாவட்ட தலைவர்களை நீக்கியுள்ளார். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் என்ற முறையில் நிர்வாகிகளை நியமிப்பதற்கு தனக்கு அதிகாரம் உள்ளது என்று ராமதாஸ் கூறி வருகிறார். ஆனால், ராமதாஸ் நீக்கிய நிர்வாகிகளை அன்புமணி மீண்டும் நியமித்து வருகிறார்.
ராமதாஸ் வழக்கம்போல தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தநிலையில், அன்புமணி 10 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மாவட்ட வாரியாக, பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, அன்புமணி பேசி வருகிறார். அந்த வகையில் இன்று சேலம், தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
சேலம் பொதுக்குழு
அன்புமணி இன்று சேலம் சென்ற நிலையில், சேலம், தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களான ராமதாஸின் தீவிர ஆதரவாளரான எம்எல்ஏ அருள் மற்றும் பாமக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான ஜி.கே.மணி ஆகியோர் அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்தது.
மருத்துவமனையில் 2 எம்.எல்.ஏக்கள்
இந்நிலையில், பாமக எம்.எல்.ஏ அருள் நேற்று சென்னை தலைமை செயலகம் சென்றபோது நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜி.கே.மணி எம்எல்ஏவுக்கும் நேற்று திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று பாமகவின் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெறும் சூழலில், சேலம், தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த பாமக எம்எல்ஏக்கள் இருவர், அடுத்தடுத்து நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பாமகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாமகவில் மொத்தம் உள்ள 5 எம்எல்ஏக்களில் 3 பேர் அன்புமணியை ஆதரிக்கின்றனர். ராமதாஸை ஆதரிக்கும் ஜி.கே.மணி, அருள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் தப்பிப்பதற்காக நெஞ்சு வலி என இவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனரா? என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கூட்டுப் பிரார்த்தனை - அன்புமணி
இந்நிலையில் சேலத்தில் இன்று நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, "உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நமது கட்சியின் 2 எம்எல்ஏக்களுக்காக பிரார்த்தனை செய்வோம். சிகிச்சை பெறும் அவர்கள் இருவரும் விரைவில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பூரணமாக குணமடைய வேண்டும்" என ஜி.கே.மணி, அருள் பெயரை குறிப்பிடாமல் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications