ED சம்மனில் ஜாதி பெயர்.. நிர்மலா சீதாராமனை டிஸ்மிஸ் செய்யுங்க - சென்னை அதிகாரி ஜனாதிபதிக்கு கடிதம்
சேலம்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என சென்னையில் பணியாற்றி வரும் இந்திய வருவாய்த்துறையின் உயரதிகாரி ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு பரபரப்பான கடிதத்தை எழுதி உள்ளார். சேலத்தை சேர்ந்த 2 விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் ஜாதி பெயர் குறிப்பிடப்பட்ட விவகாரத்தில் அதிகாரி காட்டமான கடிதத்தை எழுதியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அப்பம்மா சமுத்திரம் எனும் கிராமத்தை சேர்ந்தவர்கள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். பட்டியலினத்தை சேர்ந்த இவர்கள் 6 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளனர். இந்நிலையில் தான் பாஜக பிரமுகராக குணசேகரன் என்பவர் இருவரின் நிலத்தை அபகரிக்க முயன்றதாக புகார் எழுந்தது.

இதற்கிடையே தான் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி இருவருக்கும் அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. விவசாயிகளான இவர்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து இருவரும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். அப்போது தாங்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடவில்லை. தங்களது வங்கி கணக்கில் ரூ.500 மட்டுமே உள்ளது. சென்னை வர கூட மற்றவர்களிடம் தான் பணம் வாங்கி வந்தோம். ரேஷனில் தான் அரிசி வாங்கி சாப்பிடுகிறோம். நாங்கள் எந்தவித சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடவில்லை என தெரிவித்தனர்.
இதற்கிடையே தான் அந்த விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் குறித்த விஷயம் தற்போது சர்ச்சையாகி உள்ளது. அதாவது சம்மனில் அவர்களின் சாதி பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு புதிய தமிழகம் உள்பட பல கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதோடு சாதி பெயரை குறிப்பிட்ட அமலாக்கத்துறை மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இந்த விவகாரம் தற்போது பூதாகரமான நிலையில் சேலம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே தான் தற்போது சென்னையில் பணியாற்றி வரும் இந்திய வருவாய்த்துறை அதிகாரி பாலமுருகன் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு பரபரப்பான கடிதத்தை எழுதியுள்ளார். பாலமுருகன் தற்போது சென்னையில் ஜிஎஸ்டி வரித்துறையில் துணை ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர் எழுதியுள்ள பரபரப்பான கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:சம்மன் அனுப்பப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.450 தான் இருந்துள்ளது. இவர்கள் தமிழக அரசின் முதியோர் உதவித்தொகையை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்ட பாஜக பிரமுகர் அளித்த புகாரில் அவர்களுக்கு ஜாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பியது என்பது ஆச்சரியமளிக்கும் வகையிலும், கண்டிக்கும் வகையிலும் உள்ளது.
அந்த முதியவர்கள் மீது குற்றம்சாட்டிய பாஜக பிரமுகர் மீது வழக்கு உள்ளது. தற்போது அவர் சிறைக்கு வெளியே இருந்தாலும் கூட அவரது புகாரில் சம்மன் அனுப்பியது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் அமலாக்கத்துறை என்பது பாஜகவின் கைப்பாவை போல் செயல்படுவதை இது எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்ற பிறகு அமலாக்கத்துறை என்பது பாஜகவின் கொள்கைகளை அமல்படுத்தும் துறையாக மாற்றப்பட்டுள்ளது.
நான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனது தந்தை மருத்துவராக இருந்தாலும் கூட நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். நான் இந்த பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கூட விவசாயம் தான் செய்ய உள்ளேன். மாநில அரசு ஊழியர்களை போல் அல்லாமல் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளின் எந்த அழுத்தத்துக்கும் ஆளாகவில்லை. எனது 30 ஆண்டு பணிக்காலத்தில் நான் இதனை உணர்ந்துள்ளேன். ஆனால் டெல்லியில் இருந்து அழுத்தத்தை கொடுக்க முயற்சிப்பார்கள். தற்போது நிலை மாறி இருந்தாலும் கூட நிர்மலா சீதாராமன் இந்த தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
மேலும் அவர் மத்திய அமைச்சராக இருக்கும் தகுதியை இழந்துள்ளார். இதனால் மத்திய நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து நிர்மலா சீதாராமனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அதோடு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என காட்டமாக வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications