எடப்பாடி பழனிசாமியை சொந்த தொகுதியிலேயே முடக்கணும்.. முடிவெடுத்த ஸ்டாலின்.. பரபரக்கும் நிர்வாகிகள்!
சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது தொகுதியிலேயே முடக்கி வைக்க திமுக தலைமை திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே சேலம் மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் எம்பியாகவும், ஒருவர் அமைச்சராகவும் உள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பலம் வாய்ந்த ஒருவரை வேட்பாளராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நட்சத்திர அந்தஸ்து வாய்ந்த தொகுதிகளில் யார் வேட்பாளர்களாக களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதியில் திமுக சார்பாக யாருக்கு வாய்ப்பு அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி தொகுதியை பொறுத்தவரை அதிமுகவுக்கு பெரியளவில் செல்வாக்கு இருந்து வருகிறது. ஏனென்றால் 1989ல் சேவல் சின்னத்தில் போட்டியிட்டது தொடங்கி தற்போது வரைக்கும் அவர் எடப்பாடி தொகுதியில் மட்டுமே களமிறங்கி இருக்கிறார். 7 முறை தேர்தலில் போட்டியிட்டு 5 முறை வென்றுள்ளார். 2011ஆம் ஆண்டுக்கு பின் ஹாட்ரிக் வெற்றியை எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார்.
அதற்கு முதல்வர் ஆன பின் எடப்பாடி பழனிசாமி தனது தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததும் ஒரு காரணம். 1996 மற்றும் 2006 ஆகிய தேர்தலில் மட்டும் எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் தோல்வி அடைந்துள்ளார். எடப்பாடி தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டர்களும், வன்னியர்களும் அதிகளவில் இருக்கின்றனர். பாமகவுடன் எந்தக் கட்சி கூட்டணி அமைக்கிறதோ, அந்த கட்சியே இங்கு வெல்ல வாய்ப்புகள் அதிகம்.
திமுக 6 முறை நேரடியாக போட்டியிட்ட போதும், வெல்ல முடியவில்லை. பாமக இம்முறையும் அதிமுக கூட்டணிக்கே செல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதால், எடப்பாடி பழனிசாமியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி என்றே சொல்லலாம். எடப்பாடி தொகுதியில் திமுகவினர் மத்தியில் எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல செல்வாக்கு இருந்து வருகிறது.
இதனால் திமுக இம்முறை யாருக்கு வாய்ப்பு கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இம்முறை அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில், திமுக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே சேலம் மாவட்ட திமுகவின் முகமாக உள்ள செல்வகணபதி எம்பியாகவும், ராஜேந்திரன் அமைச்சராகவும், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்ஆர் சிவலிங்கம் மாநிலங்களவை எம்பியாகவும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒரே மாவட்டத்தில் 3 பேருக்கு பதவி அளிக்கப்பட்டிருப்பதால், எடப்பாடி பழனிசாமியை அவரது தொகுதியிலேயே முடக்க திமுக முடிவு எடுத்துள்ளது. ஆனால் இதுவரை எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை திமுக தலைமை முடிவு செய்யவில்லை. இதனால் கடந்த முறை புதுமுகமான சம்பத் குமாரை களமிறக்கியதை போலவே, இம்முறையும் புதுமுகம் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications