சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி சண்முகம்.. உடலை பார்த்து கண்கலங்கிய எடப்பாடி
சேலம்: சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி சண்முகம் உடலுக்கு கண்ணீர் மல்க எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி, குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து உரிய விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சேலம் தாதகாப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 62). இவர் கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்று இரவு சண்முகம் கொண்டலாம்பட்டியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து காமராஜர் நகரில் உள்ள வீட்டிற்கு பைக்கில் இவர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது 3 பைக்குகளில் 6 பேர் கொண்ட கும்பல் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளது. அவரது வீட்டின் அருகே வைத்து பைக்கில் வந்தவர்கள் முன்னும் பின்னும் வழி மறித்துள்ளனர். இதனால் அவர் முன்னாடியும் செல்ல முடியாமலும், பின்னாலும் செல்ல முடியாமலும் விபரீதம் நடக்க போகிறது என்பதை உணர்ந்த அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முயன்று இருக்கிறார்.
ஆனால் அந்த கும்பல் அரிவாள், கத்தியால் சண்முகத்தை வெட்டி சாய்த்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சண்முகம் உயிரிழந்தார். தகவல் அறிந்த அவரது 2 மனைவிகள் உறவினர்கள் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து வந்து உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அதிமுக பகுதி செயலாளர் கொலை செய்யப்பட்ட தகவல் மாவட்டம் முழுவதும் பரவியது. இதையடுத்து உறவினர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானவர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். கொலையாளிகளை கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறினர்.
இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலை வழக்கில் 9 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். உடலை வாங்கி சென்று விட்டால், அவர்களிடம் விசாரணை நடத்த வசதியாக இருக்கும் என போலீசார் கூறினர். ஆனால், முக்கிய குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று சண்முகத்தின் உறவினர்கள் தெரிவித்தனர்.
மேலும், சேலம் மாநகராட்சியின் 55 வது வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதிஷ்தான் கொலைக்கு காரணம் என்று சண்முகத்தின் உறவினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த கொலை தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகள் குறித்து 5 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், திமுக பிரமுகர் சதிஷ் உள்பட 9 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில், அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள அதிமுக நிர்வாகி சண்முகத்தின் உடலுக்கு கண்கலங்கியபடி உருக்கமாக எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: “ சண்முகம் வீட்டிற்கு அரை கிலோ மீட்டர் தொலைவில் வைத்து அவரை வழிமறித்து தாக்கி படுகொலை செய்து இருக்கிறார்கள்.
இது கடும் கண்டனத்திற்குரியது. நெஞ்சை பதற வைக்கும் செயல். படுகொலையின்போது அந்த தெருவில் உள்ள விளக்குகளை அணைக்கப்பட்டு இருக்கின்றன. திட்டமிட்டு படுகொலை நடைபெற்றுள்ளது. படுகொலைக்கு காரணமானவர் 55-வது வார்டைச் சேர்ந்த தனலட்சுமியின் கணவர் சதீஷ், தனலட்சுமி மற்றும் பலர் இந்த படுபாதக கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாக ஊடகத்திலும் பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளன.
இந்த படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பலரிடம் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் திட்டமிட்டு இந்த கொலையை செய்திருக்கிறார்கள். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டது. கட்சிக்காக பாடுபட்டவர். அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் நல்ல தொண்டர்.
கட்சிக்காக உழைத்த தொண்டரை கொடியவர்கள் கொலை செய்து குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறார்கள். இந்த ஆட்சியில் தொடர் கொலை நடந்து கொண்டே இருக்கிறது. தினந்தோறும் கொலைகள் நடக்கின்றன. இந்த கொலை குற்றம் செய்தவர் அந்த பகுதியிலேயே போதை பொருள் விற்பனை செய்வதாகவும், அதோடு லாட்டரி சீட்டு விற்றதாகவும் தகவல் கிடைத்திருக்கின்றன.
இப்படி சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்ட ஒருவரை காவல்துறையில் சண்முகம் புகார் செய்த காரணத்தால், இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சதீஷ் மற்றும் அவரோடு உள்ளவர்கள் இந்த கொலையை செய்து இருக்கிறார்கள். இந்த கொலை குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து உரிய விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications