ஜெ. ஸ்டைல்.. சேலம் மா.செயலாளர் தூக்கியடிப்பு! பிராது கொடுத்த ர.ர.க்கள்! எடப்பாடியின் அதிரடி ஆக்சன்!
சேலம்: சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஆக கடந்த 10 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலத்தை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அப் பொறுப்பிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார். தன் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளரையே எடப்பாடி பழனிசாமி மாற்ற என்ன காரணம் என்பது குறித்து விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்துள்ளது.
பரபரப்பாக இருக்கிறது அதிமுக. மிகவும் அமைதியாகவும் அதே நேரத்தில் சாதுரியமாகவும் அதிமுக தலைமையை பிடித்த எடப்பாடி பழனிச்சாமி அவ்வப்போது அதிரடி காட்டி வருகிறார். அந்த வகையில் தான் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கன்னியாகுமரி தளவாய் சுந்தரம் தூக்கி அடிக்கப்பட்டார்.

அப்போது ஜெயலலிதா பாணி அரசியலை கையில் எடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என அதிமுகவினர் கொண்டாடினர். அதற்குப் பிறகு தளவாய் சுந்தரம் கட்சியில் மீண்டும் இணைக்கப்பட்டது வேறு கதை.
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராகி வரும் நிலையில், தேர்தல் பணிகளில் கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும் எனவும், மாவட்ட செயலாளர்களை கண்காணித்து அவர்களது பணி திருப்தியாக இருக்கிறதா என்பது குறித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என மூத்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, புதுப்பிக்கப்பட்ட கட்சி உறுப்பினர் உரிமை சீட்டுகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் சென்றடைந்ததா என்பது குறித்து கள ஆய்வு செய்து டிசம்பர் 7ஆம் தேதிக்குள் அறிக்கையாக அளிக்க வேண்டும் என கள ஆய்வுக் குழுவுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.
இக்குழுவில், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, அமைப்பு செயலாளர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, அ.அருணாசலம், மகளிரணி செயலாளர் பா.வளர்மதி ஆகியோர் இடம்பெற்றனர். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த குழுவினர் மாவட்ட செயலாளர் அவர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து ஆய்வு செய்து எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிக்கையாக அளித்தனர்.
அந்த வகையில் தனது சொந்த மாவட்டமான சேலத்தில் கட்சிப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அதிமுக அமைப்பு செயலாளர் சிங்காரத்தை எடப்பாடி பழனிச்சாமி நியமித்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் அவர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட செயலாளர் பதவி வெங்கடாசலத்தின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக கடந்த 10 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்தவர் வெங்கடாசலம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோதும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தவர். எடப்பாடி சிலுவம்பாளையம் , எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊராக இருந்தாலும் அவர் தற்போது நெடுஞ்சாலை நகரில் தங்கி உள்ளார். அது சேலம் மாநகர் மாவட்ட எல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சேலம் மாநகர் மாவட்ட அதிமுகவின் பணிகளை மேற்கொள்வதற்காக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், சூரமங்கலம் பகுதி செயலாளரான ஏகேஎஸ்எம் பாலு ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் வெங்கடாசலம் கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது. எதிர்க் கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும் சில முக்கிய நிர்வாகிகள், நெடுஞ்சாலை, பொதுப்பணி உள்ளிட்ட அரசு டெண்டர் பணிகளை எடுத்து செய்து வருகின்றனர். அப்போதுதான் கட்சி வளர்ச்சிப் பணிகளையும் பொதுக்கூட்டங்களையும் நடத்த முடியும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் பலர் டெண்டர், நெடுஞ்சாலை காண்ட்ராக்ட் உள்ளிட்ட பணிகளை எடுத்து செய்து வருகின்றனர். ஆனால் வெங்கடாசலம் அதிமுகவினரை கட்சிப் பணிகள் தவிர வேறு எந்த பணியும் மேற்கொள்ளக் கூடாது என கட்டாயப்படுத்துவதாகவும், மேலும் அவரது சில செயல்பாடுகள் தொண்டர்களை காயப்படுத்துவது போல் இருப்பதாக சிங்காரத்திடம் புலம்பி தீர்த்திருக்கின்றனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரிலேயே பல வார்டுகளை இழக்க வெங்கடாசலத்தின் நடவடிக்கையின் காரணம். எனவே அவரை மாற்ற வேண்டுமென பெட்டி பெட்டியாக புகார்களை அடுக்கி இருக்கின்றனர்.
இதை அடுத்து சிங்காரம் தனது அறிக்கையை எடப்பாடி பழனிச்சாமி இடம் கொடுத்திருக்கிறார். அதற்கு பிறகாகவே இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார் எடப்பாடி என்கின்றனர் சேலம் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications