சட்டமன்ற தேர்தல் தான் ஃபைனல் மேட்ச்.. அந்த ஃபைனல் போட்டியில் அதிமுக தான் வெல்லும்! எடப்பாடி உறுதி

Subscribe to Oneindia Tamil

சேலம்: வரும் சட்டமன்றத் தேர்தல் தான் ஃபைனல் மேட்ச், அந்த ஃபைனல் போட்டியில் அதிமுக தான் வெல்லும் எனவும், இன்னும் பதினைந்து அமாவாசைகள் மட்டுமே உள்ளது மக்கள் ஆதரவுடன் மீண்டும் 2026 அதிமுக ஆட்சி அமையும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் கொங்கணாபுரம் பகுதியில் அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார். பின்னர் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.

edappadi palaniswami udhayanidhi stalin salem

அப்போது பேசிய அவர்," அதிமுக என்றால் எப்பொழுதுமே மக்கள் துணை நின்று கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகிய காலத்தில் சரி, அவர்கள் மறைவிற்குப் பிறகும் அதிமுகவிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

ஒரு கட்டிடம் உறுதியாக இருக்க வேண்டும் என்றால் அஸ்திவாரம் உறுதியாக இருக்கவேண்டும். அதேபோன்று ஒரு கட்சி உறுதியாக இருக்க வேண்டும் என்றால் ஒன்றியத்தில் உள்ள கிளைக் கழகங்கள் வலிமையாக இருக்க வேண்டும். வலிமையாக இருப்பதன் காரணமாக தான், எவ்வளவு பெரிய எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் பயந்து ஓடுகின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பிடித்து சரித்திரம் படைக்க உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதிரியும், சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதிரியும் மக்கள் வாக்களிக்கிறார்கள்.

துணை முதல்வர் உண்மையை ஏற்று கொண்டுள்ளார். அடுத்த வரும் சட்டமன்றதேர்தல் தான், உண்மையான தேர்தல் பைனல் மேட்ச். அதில் அதிமுக தான் வெற்றி பெறும். திமுக விளையாட்டை ஆரம்பித்து விட்டீர்கள். அந்த விளையாட்டுக்கான கோப்பையை அதிமுக தான் வெற்றிபெறும். அதிமுக போன்ற வலிமையான இயக்கத்தை திமுக திட்டமிட்டு வீழ்த்த நினைக்கிறார்கள், அது ஒருபோதும் நடக்காது. எந்த அளவிற்கு மக்கள் சக்தி இருக்கிறது என்பதை திமுக உணரவில்லை. திமுக கூட்டணியை நம்பி இருக்கிறார்கள். திமுக பலம் இல்லை, கூட்டணி பலத்தை நம்பி தான் இருக்கிறது.

கிராமங்களில் ஒரு உதாரணம் கூறுவார்கள், ஒருவர் மட்டையை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொருவராக அவரை பிடித்து தொங்குவார்கள். இறுதியாக ஒருவன் தொங்குவான், மேலே இருப்பவன் கைவிட்டால் கீழே இருப்பவன் நிலைமை அவ்வளவுதான். அதே போன்று தான் திமுகவின் நிலை கூட்டணி கட்சி சேர்ந்தவர் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் இறுதியாக பிடித்து தொங்கிக் கொண்டிருப்பவர் திமுக.

கூட்டணியில் மேலே இருப்பவன் கைவிட்டால், திமுகவின் நிலைமை அவ்வளவுதான். திமுக என்ற ஊழல், ஊழல் என்றால் திமுக. அதுதான் திமுகவிற்கு அடையாளம். சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்றால் அது அதிமுகவில் மட்டும்தான். வேறு எந்த கட்சியிலாவது முடியுமோ. அதிமுகவின் வலிமையை குறைத்து மதிப்பிடுகிறார்கள். சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும், மேலே இருக்கும் சக்கரம் கீழே வரும், கீழே இருக்கும் சக்கரம் மேலே வரும்.. இந்த ஆட்சி நிரந்தரமான ஆட்சியல்ல.

எனது வெற்றிக்காக பாடுபட்டவர்களை கண்ணை இமை காப்பது போன்று காப்பேன். திமுக ஆட்சியில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வேண்டுமென்று மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று பேசி வருகிறார்கள். எனது சட்டமன்ற தொகுதியில் மக்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை குறித்து ஆராய்ந்து தீர்த்து வைத்து வருகிறேன். என்னன்ன திட்டங்களின் நிறைவேற்றி உள்ளேன் என்று பட்டியலே உள்ளது.

அதிமுக ஆட்சி கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் கால்நடை பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் கால்நடை பூங்காவை நாங்கள் திறப்போம். துணை முதலமைச்சர் ஒரே ஒரு செங்கலை தூக்கிக்கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசிக்கொண்டிருந்த துணை முதலமைச்சர்; அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் கால்நடை பூங்காவை திறக்கவில்லை. ஒரு அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு சான்று அதிமுக அரசாங்கம்.

திமுக ஆட்சியில் செய்த ஒரே ஒரு சாதனை துணை முதலமைச்சர் ஆக உதயநிதி ஸ்டாலின் ஆனது தான். எந்த சாதனையும் செய்யவில்லை. மேலும் பெண்களுக்கு இலவச பேருந்து என்று தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக வெற்றி பெற்று வந்தவுடன் அப்படியே அண்டர் பல்டி அடித்து விட்டனர். பெண்கள் பிங் நிற வண்ணத்தில் உள்ள பேருந்துகளில் மட்டுமே பயணிக்க முடியும் என்று கொண்டு வந்து விட்டனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தால், நாட்டு மக்கள் அதிமுகவை வாழ்த்துகின்றனர். அரசாங்கம் மாறலாம் ஆனால் மக்கள் அப்படியேதான் இருக்கிறார்கள், திமுக புதிய திட்டங்களை கொண்டு வரமாட்டார்கள். ஏற்கனவே கொண்டுவரப்பட்டதை நிறைவேற்ற மாட்டார்கள் இதுதான் திமுகவின் நிலை.

தமிழகத்தில் திமுக அரசில் வாரிசு அரசியல் நடைபெற்று வருகிறது. கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால் மட்டுமே பதவிக்கு வரமுடியும் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி அவருக்குப் பிறகு இன்பநதி என்ற நிலையை உருவாக்கி ஏற்பட்டு வருகிறது. அது ஒருபோதும் நடக்காது. மக்கள் என்ன ஏமாளியா?

குடும்ப ஆட்சி தொடரவேண்டுமா? வாரிசு அரசியல் நாட்டுக்கு தேவையா? மன்னராட்சி ஏற்கனவே ஒழிக்கப்பட்டு விட்டது. மீண்டும் மன்னர் ஆட்சியை கருணாநிதி குடும்பத்தின் மூலமாக புகுத்த பார்க்கிறார்கள்.அதை ஒழிக்க வருகின்ற சட்டமன்ற தேர்தல் மூலமாக ஒழிக்க வேண்டும், இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக அமையும்.

என்னைபற்றி துணை முதல்வர் விமர்சனம் செய்து வருகிறார். உனது வயது, எனது அனுபவம் இருக்கிறது. கருணாநிதி குடும்பத்தில் பிறந்து கலைஞரின் பேரன், ஸ்டாலின் மகன் என்பதால் பதவி கிடைத்தது. திமுகவில் எத்தனை முத்த நிர்வாகிகள் இருக்கிறார்கள், ஸ்டாலினின் மகன் என்பதால் துணை முதல்வர் என்ற பதவி வழங்கியிருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, நானும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். எனக்கு எடுத்தவுடன் பதவி கிடைக்கவில்லை; படிப்படியாக பதவி கிடைத்தது 50 ஆண்டுகள் அதிமுகவிற்காக உழைத்தேன்.

ஒரு 41 மாத காலத்தில் ஒவ்வொரு ஒன்றரை ஆண்டு காலத்தில் சட்டமன்ற உறுப்பினராவும், அமைச்சராகவும், துணை அமைச்சராகவும் என பதவி வழங்கி வருகிறார்கள். ஏனென்றால் முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை அதனால்தான் என்று பரவலாக பேசி வருகிறார்கள். அவருக்குப் பிறகு பதவி வழங்க வேண்டும் என்று தான் வேகவேகமாக உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கி வருகிறார்கள். திமுகவின் அனுபவம் வாய்ந்த அமைச்சர்கள் எத்தனை பேர் உள்ளார்கள்.

துணை முதலமைச்சர் என்றால் ஒரு சாதாரண பதவி அல்ல. அதற்கான அனுபவம் உள்ளதா என்றால் உதயநிதி ஸ்டாலினுக்கு இல்லை. கருணாநிதி குடும்பத்தைப் பிறந்தவர் என்பதால் துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதி இருந்தபோது அனுபவம் வாய்ந்த அன்பழகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவில்லை. அப்பொழுது ஸ்டாலினுக்கு தான் துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது.

ஜெட் வேகத்தில் உதயநிதி ஸ்டாலின் வந்தார்கள். திமுகவில் உள்ளவர்கள் அனைவரையும் வெளியே தூக்கிவிட்டு கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் இத்தனை பதவிகள் பெற்றுள்ளார். உனது வயதுக்கு மேல் எனது அனுபவம். 46 வயது உனக்கு, எனக்கு 50 ஆண்டுகள் அனுபவமே உள்ளது. உனக்கு பதவி மக்கள் கொடுக்கவில்லை. இன்னும் பதினைந்து அமாவாசைகள் மட்டுமே உள்ளது. மக்கள் ஆதரவுடன் மீண்டும் 2026 அதிமுக ஆட்சி அமையும்.

அடிக்கடி முதல்வரும், துணை முதல்வரும் சேலத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை முறை வந்தாலும் அதிமுகவை அசைத்து கூட பார்க்க முடியாது. சுற்றுலாத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டதிலிருந்து சேலத்தை மட்டுமே சுற்றி வந்து கொண்டிருக்கிறார். எத்தனை முறை சுற்றி வந்தாலும் எதுவும் செய்ய முடியாது.

மேலும் தமிழகத்தில் உரிமைக்காக போராட நினைக்கும்போது அதற்கு போராட்டத்திற்கான அனுமதியை திமுக ஆட்சியில் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். ஆனால் அதிமுக ஆட்சியில் அனைத்து விதமான போராட்டங்களுக்கும் அனுமதி கொடுத்து எதிர்கொண்டது." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+