உச்சக்கட்ட பதற்றம்.. தமிழ்நாடு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூடு! சேலம் மீனவர் மாயம்
தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் உள்ள பாலாற்றில் மீன்பிடிக்க சென்ற தமிழ்நாடு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது.
சேலம்: தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் உள்ள பாலாற்றில் பரிசலில் மீன்பிடிக்க சென்ற தமிழ்நாடு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது. இதில் ஏராளமான மீனவர்கள் தப்பி வந்துவிட்ட நிலையில் ஒரு மீனவரை மட்டும் காணவில்லை என்பதால் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழ்நாடு - கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லை பகுதி அமைந்து இருக்கிறது. அங்குள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியான பாலாற்றில் தமிழ்நாடு மீனவர்கள் பரிசலில் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.
எல்லை பகுதி என்பதால் தமிழ்நாடு மீனவர்களை கர்நாடக வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தமிழ்நாடு எல்லைக்கு உட்பட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடித்து வந்து இருக்கிறார்கள்.

கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு
இந்த நிலையில், அங்கு மீன்பிடிக்க சென்ற தமிழ்நாடு மீனவர்கள் மீது கர்நாடகா வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. காவிரி கலக்கும் பகுதியான பாலாற்றில் பரிசலில் சென்று மீன்பிடி தொழிலில் தமிழர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் செவ்வாய்கிழமை 4 க்கும் மேற்பட்ட மீனவர்கள் அங்கு மீன்பிடித்து இருக்கின்றனர்.

தமிழ்நாடு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு
அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு மீனவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கிறார்கள். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தமிழ்நாடு மீனவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்து இருக்கும் கோவிந்தபாடியை சேர்ந்த மீனவரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

மீனவர் மாயம்
காரவடையான் என்று அழைக்கப்படும் ராஜா மீன்பிடிக்க பாலாறு சென்ற நிலையில் கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து தப்பி வந்த மற்ற மீனவர்களுடன் இல்லை என்பதால் அவரது உறவினர்களும், சக மீனவர்களும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். மீனவர் ராஜா கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பரிசல்கள் பறிமுதல்
எனவே கிராம மக்கள் பாலாற்றிலும், பாலாறு வனப்பகுதியிலும் மீனவர் ராஜாவை தீவிரமாக தேடி வருகிறார்கள். தமிழ்நாடு மீனவர்கள் உயிர் பிழைப்பதற்காக பாலாற்றில் விட்டுச் சென்ற அவர்களின் பரிசல்கள் மற்றும் மீன்பிடி வலைகளையும் கர்நாடக வனத்துறையினர் பறிமுதல் செய்து இருக்கிறார்கள்.

எல்லையில் பதற்றம்
நேற்று மாலை கர்நாடக வனத்துறை அதிகாரிகள் மீண்டும் பாலாற்று கரையில் யாராவது துப்பாக்கிச் சூட்டில் இறந்து நீரில் மூழ்கி உள்ளார்களா என்று தேடிச் சென்று உள்ளார்கள். இதன் காரணமாக கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில் பதற்றமான நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே பாலாற்றி இருக்கும் கர்நாடக வனத்துறை சோதனை சாவடியில் கர்நாடக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications