ராமதாஸ் கண்ணீர் விட்டு சொன்ன சென்னை கிரைம் நியூஸ் இதுதானா? பாமகவில் வலுக்கும் அப்பா- மகன் மோதல்
சென்னை: சென்னையில் சொத்து தகராறில் தந்தையை மகன் 20, 30 துண்டுகளாக வெட்டி வீசியது போல் தன்னையும் அன்புமணி வெட்டியிருக்கலாமே என ராமதாஸ் கண்ணீர் மல்க பேசிய நிலையில் அவர் சொன்ன அந்த குற்றச் செய்தி குறித்து விரிவாக பார்க்கலாம்.

சேலத்தில் பாமக செயற்குழு கூட்டம், பொதுக் குழு கூட்டம் நடந்தது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியால் தனது மனம் எப்படி புண்படுகிறது என்பதை அவர் தெரிவித்த போது , சென்னையில் சொத்து தகராறில் தந்தையை மகன் ஒருவன் 20, 30 துண்டுகளாக வெட்டி கொன்றுவிட்டார். அது போல் அன்புமணி என்னை வெட்டியிருந்தால் நான் எப்போதோ போய் சேர்ந்திருப்பேனே என கண்கலங்கினார்.
அவ்வாறு ராமதாஸ் சொன்ன அந்த கிரைம் செய்தி என்னவென பார்க்கலாம்.
இந்த குற்றம் 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடந்தது. சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த 80 வயது முதியவர் குமரேசனை (படத்தில் வலது புறம் இருப்பவர்) காணவில்லை என அவரது மகள் காஞ்சனா வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீஸ் விசாரணையின் போது குமரேசனின் மகன் குணசேகரன் காணாமல் போனதும் அவரது வீட்டில் ரத்தக் கறை இருந்ததும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் சொத்துத் தகராறில் குமரேசன் கொலை செய்யப்பட்டிருப்பதும் அவரது உடல் ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்திற்கு கொண்டு சென்று மகன் குணசேகரன் புதைத்திருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த குணசேகரனின் நண்பர் வெங்கடேசனிடம் போலீஸார் விசாரணை நடத்திய நிலையில், தனக்கு எதிராக வைக்கப்பட்ட செய்வினையை ஒரு தண்ணீர் பேரலில் போட்டு வைத்துள்ளேன், அதை புதைக்க வேண்டும் என தன்னிடம் குணசேகரன் கேட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சடலத்தை தோண்டி எடுத்த போது அந்த உடல், 20, 30 துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்தது. இந்த சம்பவம் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் காவேரிப்பாக்கத்தில் உள்ள அந்த இடத்தை குணசேகரன் வாங்கினாராம்.
இந்த கிரைம் செய்தியைத்தான் பாமக நிறுவனர் ராமதாஸ் சுட்டிக் காட்டி பேசியிருந்தார். தனது மகன் குறித்து கூறிய போதெல்லாம் கண்கலங்கினார்.












Click it and Unblock the Notifications