குளமாக மாறிய மேட்டூர் அணை.. நந்தி சிலையின் முழு தரிசனம்.. பயிர் சாகுபடி செய்யும் மக்கள்
சேலம்: மேட்டூர் அணை முற்றிலும் வறண்டு விட்டது. மிகப்பெரிய மேட்டூர் அணை தற்போது குளம் போல காட்சி அளிக்கிறது. தண்ணீர் வற்றிய பகுதிகளில் விவசாயம் செய்யப்படுவதால் பச்சைப் பசேல் என காட்சி தருகிறது மேட்டூர் அணை. பழமையான நந்தி சிலை முழுவதுமாக தெரிவதால் ஏராளமானோர் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் விவசாயத்திற்கு முக்கிய நீராதரமாக விளங்குவது மேட்டூர் அணை. இந்த அணை மூலம் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் தற்போது 30 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. நீர் இருப்பு 7 டிஎம்சியாக உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக, கடந்த ஜூன் 12ம் தேதி முதல் இன்று காலை வரை 91 டி.எம்.சி நீர் திறக்கப்பட்டது. இந்தநிலையில், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் மீன் வளம் மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு பாசனத்திற்காக 120 நாட்களில் 92 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பருவமழை இந்த ஆண்டு தமிழகத்தில் தொடங்காத காரணத்தினாலும், கர்நாடகா மாநிலத்தில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் போதிய அளவு போதிய திறக்கப்படாததினால் மேட்டூர் அணையில் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 30 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 7 டி எம் சி க்கும் கீழ் குறைந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த நீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
பருவ மழை காலங்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இதுபோன்று மிகவும் குறைவது இது இரண்டாவது முறையாகும். கடந்த 1982 ஆம் ஆண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் அக்டோபர் மாதத்தில் குறைந்த நிலையில் 41 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 30 அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் 90 சதவீத நீர் பிடிப்பு பகுதி விளைநிலங்கள் போல காட்சி அளிக்கிறது. தண்ணீர் இல்லாத இந்த நேரத்தில் அணையின் கரையோர கிராமத்தில் வசிக்கும் மக்கள் நீர் பிடிப்பு பகுதியில் எள், சோளம் போன்ற பயிர்களை சாகுபடி செய்வது வழக்கம். நடப்பாண்டில் கர்நாடக மாநிலத்தில் மழை பெய்து அங்குள்ள அணைகள் நிரம்பினால் மட்டுமே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத் தொடங்கும் என்பதால் வறண்ட நீர்பரப்பு பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். தற்போது இந்த பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வருகின்றன. இதனால் அணையின் பல பகுதிகள் பசுமையாக காட்சி அளிக்கின்றன.
அணையில் தற்போது 30 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பதாக கூறப்பட்டாலும் மழை பெய்து அணைக்கு தண்ணீர் வந்தால் மட்டுமே நடப்பாண்டு குடிநீருக்கு பிரச்சினை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications