ஒரு விசயத்தில் “சொதப்பல்”.. சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் என்ன பிரச்சனை? புலம்பி தள்ளும் கட்சியினர்
சேலம்: நேற்று சேலத்தில் நடந்து முடிந்த திமுக இளைஞரணி மாநாட்டின் ஏற்பாடுகள் தொடர்பாக திமுகவினரே சமூக வலைதளங்களில் தங்களின் ஆதங்கங்களை பகிர்ந்து வருகிறார்கள். அப்படி என்ன பிரச்சனை? விரிவாக பார்ப்போம்.
திமுக இளைஞரணிச் செயலாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2007 ஆம் ஆண்டு இருந்தபோது இளைஞரணியின் முதல் மாநில மாநாடு நெல்லையில் நடைபெற்றது. இந்த நிலையில் இளைஞரணியின் 2 வது மாநில மாநாடு திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழ்நாடு அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், லட்சக்கணக்கான இளைஞரணி நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டார்கள்.

சனிக்கிழமை இரவே மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் உருவங்கள் கண்கவர் டிரோன் ஷோ மூலம் வானில் காட்சிபடுத்தப்பட்டது. மிக பிரமாண்டமாக நடைபெற்ற இந்த இளைஞரணி மாநாட்டில் 25 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் வந்திருந்த திமுக இளைஞரணி நிர்வாகிகளின் கூட்டத்தால் சேலமே ஆர்ப்பரித்து காணப்பட்டது. பேருந்துகளில் கூட்டம் கூட்டமாக வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பார்க்கிங் பகுதி முழுவதும் பேருந்துகளால் நிரம்பியதால் மாநாட்டு பந்தலுக்கு பல கிமீ தாண்டி பேருந்துகளை நிறுத்திவிட்டு தொண்டர்கள் நடந்து சென்றுள்ளனர். பலர் அதற்கும் செல்ல முடியாமல் திரும்பி சென்றதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். திமுக ஆதரவு முகநூல் பக்கம் ஒன்றில், "சேலம் மாநாட்டிற்கு வந்து திரும்பி சென்ற உறவுகள் இருக்கிறீர்களா..? நீங்கள் எந்த மாவட்டம்?" என்று வெளியிடப்பட்ட பதிவின் கமெண்ட் பகுதியில் பலர் புலம்பி தள்ளி உள்ளார்கள். வேலூர், பழனி, திண்டுக்கல், அரியலூர், விழுப்புரம், ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, ஓமலூர், செங்கல்பட்டு, தஞ்சை என கருத்துக்கள் வந்துகொண்டே உள்ளன.
ராஜசேகரன் என்பவர், "சேலம் இரண்டாவது இளைஞர் அணி மாநாட்டில் கலந்து கொண்ட அற்புதமான தருணம். பல சோதனைகளையும் தாண்டி இந்த மாநாட்டில் கலந்து கொண்டேன் இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே. 27 கிலோ மீட்டர் பாதயாத்திரை சென்று மாநாட்டில் கலந்து கொண்டேன் புது அனுபவம் புதிய பலவற்றை கற்றுக் கொடுத்தது. எனக்காக இரவு 11.30 மணி வரை காத்திருந்து உணவளித்த அண்ணன் பிரபாகரன் அவர்களுக்கும் மாவட்ட கழக செயலாளர் அவர்களுக்கும் நன்றி." என்று குறிப்பிட்டு உள்ளார்.
ராஜபாண்டியன் என்பவர், "நானும் சென்றிருந்தேன், எதிர் பார்த்தது ஐந்து லட்சம் பேர் வந்ததோ 10 லட்சம் பேர் மாநாட்டின் மேடையில் இருந்து 22 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் தேங்கி நின்றன, என்ன செய்வது?" என்று குறிப்பிட்டார். கோயம்புத்தூர் ராம் என்பவர், "மாநாடு முடிஞ்சு வெளியே வருவதற்கே மணி 10:00 ஆயிடுச்சு இதுல வீட்டுக்கு போறது மணி காலைல அஞ்சு ஆயிடுச்சு" என்று தெரிவித்து இருக்கிறார்.
கௌதம் சச்சின் என்பவர், "மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது அனைத்து வசதிகளும் மிகச்சிறப்பாகவே இருந்தது ஒரே ஒரு குறை என்றால் மாநாடு நடைபெறும் இடத்திற்கும் வண்டிகள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்ட இடத்திற்கும் குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர் தூரம் முதல் 8 கிமீ வரை இருந்தது. கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால் போலீசாரால் மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியவில்லை மாநாடு மிக பெரிய வெற்றியை கண்டுள்ளது" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications