ஆதார் கார்டு ஜெராக்ஸில் ஆமை வடை.. கலெக்டர் ஆபீஸ் கேண்டீனில் அதிரடி ரெய்டு! இப்படி பண்ணா எப்படிங்க?
சேலம்: சேலம், 4 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் கேண்டீனில் ஆதார் உள்ளிட்ட பொதுமக்களின் பல்வேறு ஆவணங்களின் ஜெராக்ஸில் வைத்து வடை போண்டா விற்பனை செய்த கேண்டீனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, சுகாதாரம் இன்றி விற்பனை நடைபெற்றதால் அதனை தற்காலிகமாக மூட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
தமிழகம் முழுவதும் பெருந்திட்ட வளாகங்கள் அமைக்கப்பட்டு அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மேலும் வருவாய்த்துறை, வேளாண்மை துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அலுவலகங்களும் அங்கு செயல்பட்டு வருகிறது.

பல்வேறு கோரிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்கள் அனைத்து துறை அலுவலர்களையும் அணுகும் பொருட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் பொதுமக்கள் வசதிக்காக ஆங்காங்கே தேனீர் கடைகள், சிற்றுண்டி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றை மகளிர் சுய உதவி குழுவினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கேண்டீன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை தனியார் ஒருவர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் இந்த கேண்டீனில் கடந்த சில நாட்களாகவே விலைப்பட்டியல் இல்லாமல் அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்பது, சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் அந்த கடையில் விதிகளுக்கு புறம்பாக ஜெராக்ஸ் கடை ஒன்றும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு சேவைகளை பெறுவதற்காக வரும் பொதுமக்கள் தங்கள் ஆதார் கார்டு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட தேவைகளுக்காக தங்களது ஆவணங்களை அங்கு ஜெராக்ஸ் எடுக்கின்றனர். ஆனால் அவ்வாறு ஜெராக்ஸ் எடுக்கப்படும் ஆவணங்களை முழுமையாக பொது மக்களுக்கு அவர்கள் வழங்காமல் அவர்களே வைத்துக் கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று அந்த கடைக்கு சென்ற பொது மக்களுக்கு வடை போண்டா உள்ளிட்ட சிற்றுண்டிகளை பொதுமக்களின் ஆவணங்களில் வைத்து வழங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிலர் இந்த காட்சிகளை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனையடுத்து அந்த கேண்டீன் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் புகாரை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த கேண்டீனில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கேண்டீனை முறையாக பராமரிக்காததற்காகவும் தடை செய்யப்பட்ட காகிதங்களில் உணவுப்பொருட்களை வழங்கியதற்காக 2000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் கேண்டீன் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படாததால் அதனை தற்காலிகமாக மூடினர். மேலும் கேண்டீனை முழுமையாக சுத்தம் செய்த பிறகு அதனை திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
ஏற்கனவே ஜெராக்ஸ் கடைகளில் பொதுமக்கள் ஜெராக்ஸ் எடுக்க கொடுக்கும் ஆவணங்களை சட்ட விரோதமாக கூடுதல் நகல் எடுத்து அவற்றை வங்கிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள், கால் சென்டர்களுக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் பொதுமக்களின் ஆவணங்களை கூடுதலாக ஜெராக்ஸ் எடுத்து அதில் வடை போண்டா விற்பனை செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications