உடைந்து கிடந்த பீர் பாட்டில்.. வீடு முழுக்க ரத்தம்.. சேலம் ஜெயலட்சுமிக்கு ஆத்திரம்.. விபரீதம்
சேலம்: சேலத்தில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென மனைவி பீர் பாட்டிலால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கணவன் தெரிவித்துள்ளார். இதனிடையே அந்த பெண் கொல்லப்பட்டாரா அல்லது உயிரை மாய்த்துக் கொண்டாரா என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி இவருக்கு 31 வயது ஆகிறது. இவரது கணவர் நாகராஜ். இவர்களுக்கு 14 வயது மற்றும் 11 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக ஜெயலட்சுமி நாகராஜ் தம்பதி பிரிந்து வாழ்கிறார்கள்.

இதனிடையே சேலம் தாதகாபட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழழகன் (31) இவர் வினோதினி என்பவரை 14 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள் இந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக வினோதினி மற்றும் குழந்தைகளை விட்டு சென்றுவிட்டார்.
இதையடுத்து கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த ஜெயலட்சுமியுடன் மனைவியை பிரிந்து வாழ்ந்த தமிழழகனுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் இருவரும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அம்மாபேட்டை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்கள். இந்த நிலையில், 9ம் வகுப்பு படித்து வரும் ஜெயலட்சுமியின் மூத்த மகள் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் இரண்டு பாடத்தில் தோல்வியடைந்துள்ளார். இந்த விவகாரத்தில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இருவரும் வீட்டில் தங்களது கைகளில் கிடைத்த பொருட்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு சண்டையிட்டார்களாம். அப்போது திடீரென ஜெயலட்சுமி ஆத்திரத்தில் வீட்டில் உடைந்து கிடந்த பீர் பாட்டிலை எடுத்து தன்னைத் தானே கழுத்தில் குத்திக் கொண்டாராம். இதில் ஜெயலட்சுமியின் கழுத்தில் இருந்து ரத்தம் வழிந்து வீடு முழுவதும் பரவி உள்ளது. இந்த கொடூர நிகழ்வில் ஜெயலட்சுமி இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்மாப்பேட்டை போலீசார் ஜெயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதேபோல் ஜெயலட்சுமியின் 2வது கணவர் தமிழழகனை அம்மாபேட்டை போலீசார் அழைத்துச் சென்று விசாரித்து வருகிறார்கள். ஜெயலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications