பெண்களுக்கு வழங்கும் இலவச டவுன் பஸ் டிக்கெட்டில் இப்படியும் ஒரு மோசடி.. மிரண்டுபோன சேலம்!
சேலம்: பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய தமிழக அரசு வசதி செய்து கொடுத்துள்ள நிலையில், அதை சில நடத்துனர்கள் தவறாக பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது.
ஆட்சிக்கு வந்ததும் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதி.
இதைத்தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் முக ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவில், இந்த வாக்குறுதி நடைமுறைக்கு வருவதாக அறிவித்தார்.

கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசு
இதன்படி, நகரப் பகுதிகளில் இயக்கப்படும் டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம். திருநங்கைகளும் இதே போன்ற வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மாற்றுத்திறனாளிகளின் இதேபோன்ற கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்ட அரசு, அவர்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதித்து உள்ளது.

பலவகை டிக்கெட்டுகள்
இதன்படி 4 வகையாக டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு இருக்கின்றன. மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு உதவிக்கு உடன் பயணிக்கும் ஒரு நபர் ஆகியோருக்கு இதுபோல இலவச பஸ் பயணம் சாத்தியப்பட்டிருக்கிறது. அந்தந்த பிரிவை சேர்ந்தவர்களுக்கு அதற்கு உரிய டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நலனுக்காக அரசு கொண்டுவந்த இந்த திட்டத்தை சில நடத்துனர்கள் தங்கள் சுய லாபத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

சேலம் நகரில் மோசடி
இப்படித்தான், சேலம் ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்ற டவுன் பஸ் ஒன்றை டிக்கெட் பரிசோதகர்கள் நடுவழியில் நிறுத்தி பரிசோதனை செய்து பார்த்த போது இந்த மோசடி அம்பலத்திற்கு வந்திருக்கிறது. பீகார் மாநிலத்தை சேர்ந்த 21 ஆண் தொழிலாளர்கள் கைகளில் பெண்களுக்கு வழங்கப்படும் இலவச டிக்கெட் இருப்பதை பார்த்து டிக்கெட் பரிசோதகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது நடத்துனர் இந்த டிக்கெட்டுகளை தங்களுக்கு கொடுத்துவிட்டு ஒவ்வொருவருக்கும் தலா 6 ரூபாய் வசூல் செய்ததாக தெரிவித்திருக்கிறார்கள்.

படிக்கத் தெரியாததால் ஏமாற்று வேலை
பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் என்பதால் இது இலவச டிக்கெட் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கிறது. இதை நடத்துனர், தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார். இது தொடர்பாக மண்டல போக்குவரத்து மேலாளர் லட்சுமணனுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மோசடிகளில் ஈடுபட்ட நடத்துனர் நவீன்குமார் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

பேராசை பெரு நஷ்டம்
126 ரூபாய்க்கு ஆசைப்பட்டு மோசடி செய்த நடத்துனர் இப்போது செய்துவந்த பணி இல்லாமல், துறை ரீதியான விசாரணையையும் எதிர் கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியெல்லாம் யோசித்து நாட்டில் மோசடி நடக்கிறது என்பதை பாருங்கள்.












Click it and Unblock the Notifications