பட்டா பெயர் மாற்ற போன கண்ணன்.. சேலம் சோளம்பள்ளம் பஸ் ஸ்டாண்டை நில அளவையர் மறக்கவே மாட்டார்
சேலம்: சேலம் சூரமங்கலம் புதுரோடு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது அப்பாவின் பெயரில் பட்டா பெயரில் நிலப்பட்டாவை தனது பெயருக்கு மாற்றக்கோரி விண்ணப்பித்தார். இந்நிலையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு சேலம் மேற்கு தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவையர் பிரிவில் பணியாற்றும் நில அளவையர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்ச பணத்தை வாங்க முயன்ற போது, நில அளவையரை கையும் களவுமாக பிடித்து போலீசார் கைது செய்தனர்.
வருவாய் துறையில் பட்டா மாற்றம் என்பது நிலம் வாங்கும் போதே தானாக மாறும் வகையில் உள்ளது. அதேநேரம் பழைய நிலத்தின் பட்டாவை பெயர் மாற்றப்போனால் பல்வேறு விதிமுறைகள் உள்ளது. அதேநேரம் விதிமுறைளுக்கு நடுவில் சில அதிகாரிகள் லஞ்சம் கொடுத்தால் உடனே பட்டா பெயர் மாற்றம் செய்து தர பரிந்துரைப்பதாக கூறுகிறார்கள்.

லஞ்சம்
அப்படி லஞ்சம் வாங்கும் விஏஓ, நில அளவையர், வருவாய் அதிகாரி, தாசில்தார், வரி வசூலிப்பவர் என பலர் அடிக்கடி கைதாகி வருகிறார்கள். அந்த வகையில் சேலத்தில் பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய அதிகாரி கைதாகி உள்ளார். அவர் எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.
பட்டா பெயர் மாற்றம்
சேலம் சூரமங்கலம் புதுரோடு பகுதியை சேர்ந்த 48 வயதாகும் கண்ணன் என்ற தொழிலாளி, தனது தந்தை பெயரில் உள்ள நிலப்பட்டாவை தனது பெயருக்கு மாற்ற விரும்பியுள்ளார். இதற்காக கண்ணன் சேலம் மேற்கு தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவையர் பிரிவில் விண்ணப்பம் செய்திருக்கிறார். இது தொடர்பாக நில அளவையர் சங்கர் என்பவர் கண்ணனை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அவர், பட்டாவில் பெயர் மாற்றி தருவதற்கு ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும் முதல்கட்டமாக ரூ.5 ஆயிரம் தருமாறு கூறினாராம்.
லஞ்சம் தர மறுப்பு
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கண்ணன், இது குறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து கண்ணனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தனர். லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரின் திட்டப்படி, தொழிலாளி கண்ணன், நில அளவையர் சங்கரிடம் பணத்தை எங்கு வந்து கொடுக்க வேண்டும்? என கேட்டுள்ளார். அதற்கு அவர் சோளம்பள்ளம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்து பணத்தை கொடுக்குமாறு கூறினாராம்.
சோளம்பள்ளம் பஸ் ஸ்டாண்ட்
இதையடுத்து கண்ணன் நேற்று காலை சேலம் சோளம்பள்ளத்திற்கு சென்று அங்கிருந்த நில அளவையர் சங்கரிடம் லஞ்ச பணம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் லஞ்சம் வாங்கிய சங்கரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். தொடர்ந்து நில அளவையர் சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications