ரிசர்வ் வங்கியில் 1 லட்சம் செலுத்தினால் 5 லட்சம்.. சேலம் ஜில்லாவில் கோடிகளை குவித்த கும்பல்
சேலம்: சிலர் என்ன சொன்னாலும் நம்புவார்கள் போல.. ரிசர்வ் வங்கியில் பணம் போட்டால் பல லட்சம் லாபம் கிடைக்கும் என்று நம்ப வைத்துள்ளது ஒரு கும்பல். சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ரிசர்வ் வங்கியின் பெயரை பயன்படுத்தி 20 பேரிடம் ரூ.4½ கோடி வரை மோசடி செய்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் பெண் உள்பட 6 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். ஒரு லட்சம் போட்டால் ஐந்து லட்சம் கிடைக்கும் எனறு ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் பெயரில் மோசடி நடந்துள்ளது.
பணத்தை வங்கியில் தான் போட முடியும். வங்கிகளில் வட்டி விகிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒரு சில தனியார் வங்கிகள் தான் அதிக வட்டி தருகின்றன. மற்றபடி செல்வ மகள் சேமிப்பு திட்டம், தொழிலாளர் வைப்பு நிதி, பொன் மகன் சேமிப்பு திட்டம், அஞ்சல் சேமிப்பு போன்றவற்றில் சற்று அதிகமாக வட்டி கிடைக்கிறது. அதிகபட்சமாக 8 முதல் 9 சதவீதம் வரை தான் சேமிப்புக்கு வட்டி விகிதம் தர முடியும்.

ஆனால் சிலர் ஒரு லட்சம் வாங்கினால் சில வருடங்களில் ஐந்து லட்சம் கிடைக்கும் என்றும், 10 வட்டி , ஐந்து வட்டிகிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறுகிறார்கள். அதை உண்மை என்று நம்பி மக்கள் ஏமாறுகிறார்கள். பொதுவாக மக்கள் வேறு வேறு பெயரில் ஏமாற்றப்படுகிறார்கள். சேலம் ஜில்லாவில் ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி மோசடி செய்திருக்கிறார்கள்.
சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஒரு கும்பல் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என கூறியும், வங்கியின் பெயர், சின்னங்களை பயன்படுத்தியும், போலியான ஆவணங்களை தயார் செய்தும் பொதுமக்களிடம் பணம் மோசடி செய்ததிருக்கிறார்கள். அதுவும் எப்படி என்றால், பொதுமக்களிடம் ஆவணங்களை காட்டி ரிசர்வ் வங்கியில் பணம் செலுத்தினால் அதிக வட்டி கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்கள்.
ரூ.1 லட்சம் செலுத்தினால் ரூ.5 லட்சம் வரை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்கள். இதை நம்பி ஏராளமானவர்கள் பணம் கட்டினர். ஆனால் அவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. இந்த மோசடி முதலில் ரிசர்வ் வங்கிக்கே தெரியாது. ஒருகட்டத்தில் ரிசர்வ் வங்கிக்கு அழைத்து பேசிய போதுததான், அவர்களுக்கே உண்மை தெரியவந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கியின் உதவி பொதுமேலாளர் கென்னடி சேலம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் டிஎஸ்பி வினோத் மற்றும் இன்ஸ்பெக்டர் இந்திரா ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களிடம் அவர்கள் ரூ.4.5 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை திருப்பி கேட்டால் அவர்களை டெல்லிக்கு அழைத்து சென்று அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்திருக்கிறார்கள்.. அங்கு போலி அதிகாரிகளை வர வைத்து அவர்களிடம் பேச வைத்து நம்ப வைத்து ஏமாற்றி உள்ளார்கள். பொதுமக்களிடம் மோசடி செய்த கும்பல் அவர்களை நம்ப வைக்க பல தில்லாங்கடி வேலைகளை செய்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் இந்த மோசடி தொடர்பாக தஞ்சாவூரை சேர்ந்த நித்யானந்தம் (வயது 60), சந்திரா (58), தர்மபுரியை சேர்ந்த அன்புமணி (45), சேலத்தை சேர்ந்த முத்துசாமி (35), கேசவன் (44) மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சார்லா கிஷோர் குமார் (48) ஆகிய 6 பேரை சேலம் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர். ரிசர்வ் வங்கி பெயரில் கோடிகளில் நடந்த மோசடி விவகாரம் தற்போது பேசுபொருளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications