ஆளுநர் ரவிக்கு எதிராக போராட்டம்- பெரியார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் நாளை கறுப்பு உடைக்கு தடை!
சேலம்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திராவிடர் விடுதலைக் கழகம் நாளை கறுப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் நாளை கறுப்பு உடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, சனாதனம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இது மிகப் பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. ஆளுநர் பேசுகிற சனாதனம் என்பது எது? என்பது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ஆனாலும் சனாதனம் குறித்து ஆளுநர் பேசி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், சனாதனத்தின் உச்சநட்சத்திரமாக வள்ளலார் திகழ்ந்தார் என ஆளுநர் ரவி பேசியிருந்தது பெரும் விவாதத்தை உருவாக்கியது. சனாதனத்தை கடுமையாக எதிர்த்தவர் வள்ளலார்; ஆனால் வள்ளலாரை சனாதனவாதியாக ஆளுநர் திரிக்கிறார் என கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில் சனாதனத்தைப் பரப்பும் ஆளுநர் ஆர்.என்.ரவியே திரும்பிப் போ! என்ற முழக்கத்துடன் சேலத்தில் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என கொளத்தூர் தா.செ.மணி தலைமையிலான திராவிடர் கழகம் அறிவித்தது. மேலும் இந்தப் போராட்டத்தில் பல்வேறு அமைப்பினரும் பங்கேற்றனர். இதனையடுத்து ஆளுநரின் அத்துமீறல் எதிர்ப்பு கூட்டியக்கத்தின் சார்பாக பல்வேறு அமைப்புகள், கட்சிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட கறுப்பு கொடி போராட்டம், சேலத்தில் ஆளுநருக்கு எதிராக நாளை கொளத்தூர் தா.செ.மணி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சனாதன பரப்புரையாளர் ஆளுநர் ஆர் என் ரவியே திரும்பிப் போ @rajbhavan_tn
— DVK Periyar திவிக (@dvkperiyar) June 26, 2023
கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
ஏற்பாடு
ஆளுநர் அத்துமீறல் எதிர்ப்பு கூட்டியக்கம் #Blackflag #GovernorTN #RNRavi pic.twitter.com/bZPqWaZ6vs
ஆளுநர் ரவிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சேலம் பல்கலைக் கழகம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் மாணவர்கள் உள்ளிட்டோர் கறுப்பு உடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சேலம் மாநகர போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் வெளியிட்டுள்ளதாக பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் சேலம் மாநகர போலீசார் அப்படி எதுவும் சுற்றறிக்கை வெளியிட அறிவுறுத்தவில்லை என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications