சேலத்தில் மகன் வைத்திருந்த மதுவை திருட்டுத்தனமாக குடித்த தந்தை.. கற்பனையிலும் நடக்காத ட்விஸ்ட்
சேலம்: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே புனல்வாசல் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள்கள் உள்ளனர். அவரது மூத்த மகன் கதிரவன், கார் சர்வீஸ் சென்டரில் பணியாற்றி வருகிறார். கதிரவனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கதிரவனின் தந்தை கண்ணனும் மது அருந்துவார். இந்நிலையில் மகன் வைத்திருந்த மதுவை திருட்டுத்தனமாக குடித்த தந்தைக்கு என்னாச்சு தெரியுமா? இதை பாருங்கள்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே புனல்வாசல் பகுதியை சேர்ந்த 52 வயதாகும கண்ணன் என்பவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் கதிரவனுக்கு 21 வயது ஆகிறது. இவர் காட்டுக்கோட்டையில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். கதிரவனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. தினமும் மது வாங்கி, அதனை குளிர்பானத்தில் கலந்து மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்திருப்பாராம்.

இதை கவனித்த கதிரவனின் தந்தை கண்ணன், அந்த மதுவை கொஞ்சம் எடுத்து குடித்து விட்டு அதில் தண்ணீரை கலந்து வைப்பார். இது தினமும் நடந்து வந்திருக்கிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் வழக்கம் போல் மகனின் பெட்ரோல் டேங்க் கவரில் இருந்த மதுவை எடுத்து கண்ணன் குடித்து விட்டு அதில் தண்ணீரை கலந்து வைத்திருக்கிறார்.
அதனை கதிரவனும் எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் கதிரவன் வாந்தி எடுத்தார். வீட்டில் உள்ளவர்கள் கேட்ட போது, என்னை குடிகாரன் என்று சொல்கிறார்கள். எனக்கு யாரும் பெண் தரமாட்டார்கள் என்பதால் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டேன் என்று கூறினார்.
அங்கிருந்த அவருடைய தந்தை இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே நானும் அந்த மதுவை குடித்தேன் என்று கூறியிருக்கிறார். அங்கிருந்தவர்கள் தந்தை-மகன் இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கண்ணன் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். மேல் சிகிச்சைக்காக கதிரவன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications