பட்டா மாறுதல்.. சேலம் விஏஓ முதல் திருவாரூர் ஜோதி வரை வந்த பேராசை.. அரசு ஊழியர்களால் திகைத்த மக்கள்
சேலம்: சேலம், விழுப்புரம், திருவாரூர், விருதுநகர் மாவட்டங்களில் ஒரே நாளில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.. அரசு ஊழியர்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை கைதாகி கொண்டிருக்கிறார்கள்.. இதில், பெண் அதிகாரியும் கைதாகி வருவது வேதனையை தந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த உடையாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரேசன் மகன் சுபாஷ், 33. இவர், தனக்கு சொந்தமான 17.5 சென்ட் இடத்திற்கு சப்-டிவிஷன் செய்து பட்டா மாற்றம் கேட்டு செஞ்சி தாலுகா அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன், விண்ணப்பம் செய்திருந்தார்...

இந்த மனு மீது சப்டிவிஷன் செய்து பட்டா மாற்றம் செய்ய அந்த பகுதியில் விஏஓவாக உள்ள வீரணாமூர் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, 53, என்பவர் 5000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து சுபாஷ் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.. இதையடுத்து, நேற்று 2 மணிக்கு செஞ்சியில் விஏஓ திருநாவுக்கரசு வாடகைக்கு ரூபம் எடுத்து நடத்தி வரும் அலுவலகத்திற்கு சென்ற சுபாஷ், 5,000 ரூபாயை அவரிடம் கொடுத்தார். திருநாவுக்கரசு வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர் .. பிறகு, திருநாவுக்கரசை செஞ்சி தாசில்தார் அலுவலகம் அழைத்து வந்து விசாரித்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவிலில் செயல் அலுவலராக ஜோதி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 42 வயதாகிறது.. இதே கோவிலில் கிளர்க் ஆக சசிகுமார், 49, என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு துறையில் இருந்து வரவேண்டிய ரூ.2 லட்சம் சம்பளம் நிலுவையில் இருந்துள்ளது.
சிக்கிய ஜோடி
இவர் சம்பளம் பாக்கியை பெற்று தரும்படி, செயல் அலுவலர் ஜோதியை நாடியுள்ளார். அதற்கு ஜோடி, ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டாராம்.. பிறகு சம்பளம் பாக்கி ரூபாய், சசி குமாருக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று அதாவது ஏப்ரல் 3ம் தேதி, மன்னார்குடியில் உள்ள ஆதி விநாயகர் கோவிலில், ஜோதி ஆய்வு மேற்கொண்டு இருக்கும்போது, சசிகுமார் ரூ.1 லட்சம் லஞ்சம் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நந்தகோபால் தலைமையிலான போலீசார் ஜோதியை கையும், களவுமாக கைது செய்தனர். இவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகமான சொத்து
அதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பாபு என்பவருக்கு 60 வயதாகிறது.. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் மேலாளர் மற்றும் ஆணையர் (பொறுப்பு) தனி அலுவலராக பணியாற்றிய போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு விசாரணையில் பாபு அரசு அனுமதி இல்லாமல் சில சொத்துகளை வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து பாபு மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க முடிவானது... இறுதியில், பாபு அவரை பணியிடை நீக்கம் செய்து நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.. பெரம்பலூர் நகராட்சி கணக்காளராக பணிபுரிந்து வந்த பாபு வரும் மார்ச் 31ம் தேதி ஓய்வுபெற இருந்தாராம். அதற்குள் இப்படி அசிங்கப்பட்டுவிட்டார்.
சேலம் விஏஓ - பட்டா மாறுதல்
அதேபோல, சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவில் செல்லப்பிள்ளை குட்டை கிராமம் உள்ளது. இங்கு விஏஓ ரவிச்சந்திரனும், கிராம உதவியாளராக பெருமாளும் பணியாற்றி வருகின்றனர்.
அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பட்டா மாறுதல் வேண்டியும், வாரிசு சான்றிதழ் வேண்டியும் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அவரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் 2 சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று கிராம உதவியாளர் கறாராக சொல்லியிருக்கிறார்.
இதுகுறித்து ராஜேந்திரன், சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். பிறகு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய லஞ்சப் பணத்தை விஏஓ அலுவலகத்தில் கிராம உதவியாளர் பெருமாளிடம் கொடுத்தார். அவர் தன்னுடைய பங்கு ரூ.5 ஆயிரத்தை எடுத்து கொண்டு, மீதி ரூ.5 ஆயிரத்தை விஏஓ ரவிச்சந்திரனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், 2 பேரையுமே கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications