தாசில்தார், விஏஓவை தொடர்ந்து இப்ப இவங்களா? சேலத்தில் இரவில் நடந்த நரித்தனம்! அரசு ஊழியர்களே இப்படி
சேலம்: தாசில்தார், விஏஓ என முக்கிய பொறுப்புகளில் உள்ள அரசு ஊழியர்கள் லஞ்ச புகாரில் கைதாகி வரும் நிலையில் காவல்துறையிலும் இந்த லஞ்சம் ஆங்காங்கே நீடிக்கவே செய்கிறது. இதோ இப்போது சேலம் மாவட்டத்தில் மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து காவல்துறை தொடர்புடைய நபர் ஒருவர் லஞ்சம் வாங்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி, ஒட்டுமொத்த மாவட்டத்தையும் அதிர வைத்துள்ளது. இந்த வீடியோவும் வைரலாகி பரபரப்பை தந்து வருகிறது.. என்ன நடந்தது?
மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டிய அதிகார வர்க்கமே, சட்டவிரோத கும்பலுடன் ரகசிய உடன்படிக்கை வைத்திருப்பது இந்த வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, 15,000 ரூபாய் பணம் கைமாறிய விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

சேலம் வீடியோ
சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் அந்த வீடியோவில், மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்களிடம் ஒருவர் பேரம் பேசுவதும், பிறகு பணத்தை பெற்றுக்கொள்வதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் காவல்துறை பிரிவை சேர்ந்தவர் என்ற தகவல் கசிந்தவுடன், விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
"வண்டியை விடுவதற்கு இவ்வளவு கொடுத்தால் போதும்" என்பது போன்ற உரையாடல்கள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளதால், இது திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு வசூல் வேட்டை என்பது உறுதியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் நேரடியாகப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் காட்சிகள் இருப்பதால், அவர் மறுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
லஞ்சம் பெற்ற அதிகாரி
மணல் கடத்தல் விவகாரங்களைப் பொறுத்தவரை, சேலம் மாவட்டத்தின் சில பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இத்தகைய சூழலில், கடத்தல்காரர்களைக் கைது செய்ய வேண்டியவர்களே அவர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு கடத்தலுக்குத் துணை போவது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் 15,000 ரூபாய்க்காகச் சட்டத்தின் மாண்பு விற்கப்படுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த வீடியோ ஆதாரத்துடன் வெளியாகியுள்ளதால், சம்பந்தப்பட்டவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தாசில்தார் டூ விஏஓ
இத்தகைய லஞ்ச விவகாரங்களில் கீழ்நிலை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒரு ரகசிய சங்கிலித் தொடர் இருக்கலாம் என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர். மணல் மாஃபியாக்களுடன் அதிகாரிகளுக்கு இருக்கும் இந்தத் தொடர்பு, இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதற்குக் காரணமாக அமைகிறது. இந்த வீடியோ விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
ஏற்கனவே தாசில்தார், விஏஓ, என ஏற்கனவே அரசு ஊழியர்கள் லஞ்ச புகாரில் கைதாகி வரும்நிலையில், மின்துறை, இப்போது மற்ற துறைகளிலும் இதுபோன்ற லஞ்ச சம்பவங்கள் அதிகரித்துள்ளது பொதுமக்களை மேலும் அதிர வைத்து வருகிறது
அரசுத்துறைகளில் வேரூன்றி இருக்கும் இந்த லஞ்சக் கலாச்சாரத்தை வேரறுக்க, அனைத்து அரசுப் பணிகளையும் முழுமையாகத் தானியங்கி டிஜிட்டல் மயமாக்கி, பொதுமக்கள் நேரடியாக அதிகாரிகள சந்திக்க தேவையில்லாத சூழலை உருவாக்க வேண்டும். அத்துடன் ஊழல் புகாரில் சிக்கித் தண்டிக்கப்படும் ஊழியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அவர்களுக்கு பணிநீக்கம் உள்ளிட்ட கடும் தண்டனைகளைத் தாமதமின்றி வழங்கினால் மட்டுமே நிர்வாகத்தில் நேர்மையும் பயமும் நிலைபெறும்.












Click it and Unblock the Notifications