போதைப்பொருள் அதிகம் சிக்கும் டாப் 10 மாநில பட்டியலில் தமிழ்நாடு இல்லை.. சேலத்தில் ஸ்டாலின் பேச்சு
சேலம்: போதைப்பொருள் அதிகம் சிக்கும் டாப் 10 மாநில பட்டியலில், 7 மாநிலங்களில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது. இந்த டாப் 10 பட்டியலில் தமிழ்நாடு இல்லவே இல்லை என்று சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
நாடாளுமன்றத் தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இதில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான சேலம் பெத்தநாயக்கன்பட்டியில் பிரசாரம் செய்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று மோடி தற்போது புது கதையை கூறியுள்ளார். மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டபோது மோடி எங்கே போனார்?... ரவுடிகள் குற்ற வழக்குகள் உள்ளவர்கள் தான் பாஜகவில் உள்ளனர். இந்தியாவிலேயே போதை பொருள் குஜராத்தில் இருந்து தான் அதிகம் வருகிறது என்று பிடிக்கிறார்களே..
ஒரு காலத்தில் குஜராத் முதல்வராக நீங்க தானே இருந்தீர்கள்.. இப்போதும் கூட குஜராத்தில் பாஜக தானே ஆட்சி செய்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் தான் போதை பொருள் அதிகம் விற்பனை ஆவதாக புள்ளிவிவரம் வந்துள்ளது. இதனை நாங்கள் சொல்லவில்லை. மாநிலங்களவையில் மத்திய அரசு கொடுத்த அறிக்கையில் இப்படி இருக்கிறது.
இந்தியாவில் போதைப்பொருள் அதிகம் விற்பனை செய்யப்பட்டும் டாப் 10 மாநிலங்களில் 7 மாநிலங்களில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது. இந்த டாப் 10 மாநிலங்களில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. அந்த அளவுக்கு கடுமையான நடவடிக்கைகளை திராவிட அரசு எடுத்து வருகிறது. உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக தமிழகம் மீது இப்படி பொய் குற்றச்சாட்டை வைக்கிறீர்களே..
உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது அப்படி என்ன கோபம்?.. இது மாதிரி அபாண்டமான குற்றச்சாட்டை சொல்லி தமிழ்நாட்டு மக்களையும், எங்கள் இளைஞர்களையும் ஏன் இப்படி அவதூறு செய்கிறீர்கள். போதை பொருள் தொடர்பான வழக்கில் பாஜகவை சேர்ந்த 14 பேர் இங்கே சிறையில் இருக்கிறார்கள். இதற்கு பிரதமர் மோடி என்ன பதில் அளிப்பார்?.. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications