முகநூலில் மலர்ந்த காதல்... கடல் கடந்து வந்து காதலனுடன் கரம் கோர்த்த பெண் -சேர்ந்து வாழ்வதில் சிக்கல்
முகநூலில் காதல் மலர்ந்து கடல் கடந்து வந்து கரம் பிடித்தும் சேர்ந்து வாழ்வதில் சிக்கல் எழுந்துள்ளது. செய்வதறியாது தவித்து வருகிறார் இலங்கைப் பெண்.
சேலம்: முகநூலில் பழகி நட்பு காதலாகி அந்த காதல் திருமணத்தில் முடிந்தும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இணைபிரியாமல் இருக்க சேலம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
Recommended Video
அந்த காதல் பறவைகளின் பெயர் சரணவன், நிஷாந்தினி என்பதாகும். சரவணன் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர். இவருக்கு இலங்கையை சேர்ந்த நிஷாந்தினி என்பவருடன் பேஸ்புக் மூலம் அறிமுகமானது.
முகநூல் நட்பு காதலாக மாறியது. ஊர் உலகத்திற்குத் தெரியாமல் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். எத்தனை நாட்கள்தான் காதல் பறவைகளாக இருப்பது திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.

நாடு விட்டு நாடு
காதலித்தால் கடல் கூட காத தூரம்தான் என்பார்கள். உண்மைக்காதல் எங்கிருந்தாலும் எத்தனை எதிர்ப்பு வந்தாலும் சேரும். காதலன் சரவணனை கரம் பிடிப்பதற்காக 2 வாரங்களுக்கு முன்பு டூரிஸ்ட் விசாவில் சேலம் வந்தார் நிஷாந்தினி.

கெட்டிமேளம் கொட்ட கல்யாணம்
உறவினர்கள் நண்பர்கள் புடைசூழ இருவரும் ஓமலூர் அருகே பஞ்சுகாளிப்பட்டியில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மன மகிழ்ச்சியோடு திருமணம் செய்த பின்னர் திருமணத்தை பதிவு செய்ய இருவரும் அரசு அலுவலகத்தை நாடிய போது திருமணத்தை பதிவு செய்வதில் சட்ட சிக்கல் ஏற்பட்டது.

சட்டச் சிக்கல்
தடையில்லா சான்று கேட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பி உள்ளனர். இதனால் செய்வதறியாது திணறிய காதல் ஜோடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து விசா காலம் விரைவில் முடிவடைவதால் காதலனை கரம் பிடித்த போதும் சேர்ந்து வாழ முடியாமல் அந்த பெண் திணறி வருகிறார்.

சேர்ந்து வாழ வழி செய்ய வேண்டும்
கடல் கடந்து வந்து காதலனை கரம் பிடித்தும் இப்போது சேர்ந்து வாழ முடியவில்லையே என்ற கவலையால் தவித்து வருகின்றனர் புதுமண தம்பதியினர். தங்களின் திருமண பத்திரிக்கையை இணைத்து மனு கொடுத்துள்ள அந்த இளம்பெண், தங்களை பிரித்து விட வேண்டாம் என்றும் தனக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications