சேலம் அருகே குட்கா கடத்தலில் ஈடுபட்ட தவெக நிர்வாகி.. கையும் களவுமாக பிடித்த போலீஸ்.. 227 கிலோ பறிமுதல்
சேலம்: மேட்டூர் அருகே மேச்சேரி பகுதியில் காரில் தடைசெய்யப்பட்ட 227 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் கடத்தியதாக, தமிழக வெற்றிக் கழக பேரூர் செயலாளர் சுர்ஜித் கைது செய்யப்பட்டார். அவரது காரையும் போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப்பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க காவல்துறை தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. தடையை மீறி போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில், சேலம் அருகே மேச்சேரியில் காரில் குட்கா கடத்தி வருவதை போலீசார் கண்டறிந்தனர். குட்கா கடத்தியதாக சுர்ஜித் (வயது 27) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், குட்கா கடத்தி வந்த சுர்ஜித் தவெக பேரூர் செயலாளராக இருப்பது தெரியவந்தது.
அவரிடமிருந்து 227 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் கார் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சுர்ஜித்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். சேலத்தில் குட்கா கடத்தலில் பிரபல அரசியல் கட்சியின் நிர்வாகி பிடிபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சேலத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 2 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மூன்று பேரை செவ்வாய்பேட்டை போலீசார் கைது செய்தனர். சேலம் களரம்பட்டி, வீரலட்சுமி பள்ளி அருகில் ரோந்து பணியில் இருந்த போலீசார், அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 2,100 கிலோ இருந்தது கண்டறியப்பட்டது.
விசாரணையில் பெங்களூரில் இருந்து குட்காவை கடத்தி வந்து சேலம் முழுவதும் வினியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, எம்.காளிப்பட்டி பகுதியை சேர்ந்த சாமிநாதன் (வயது 38), ராஜஸ்தானை சேர்ந்த சதீஷ்பிரவீன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications