சேலத்தில் 20 இடங்களில் டூ வீலர் பேரணி! பாமகவுக்கு போலீஸ் அனுமதி மறுப்பு! என்ன காரணம் தெரியுமா?
சேலம்: சேலம் மாநகரத்தில் பாமக சார்பில் 20 இடங்களில் இன்று இருசக்கர வாகனப் பேரணி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பாமக தொண்டர்களை புத்துணர்வு பெற வைக்கும் வகையிலும், பொதுமக்கள் மத்தியில் பாமகவின் எழுச்சியையும், உற்சாகத்தையும் காட்டும் வகையிலும் இந்த இருசக்கர வாகனப் பேரணிக்கு திட்டமிடப்பட்டது. சேலம் மாநகர் மாவட்ட பாமக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அருள் தான் இதற்கான முன்னேற்பாடுகளை செய்து காவல்துறையினரிடமும் முறைப்படி அனுமதி கோரியிருந்தார்.

இந்தச் சூழலில் தான் அனுமதி மறுப்பு கடிதம் அருளுக்கு போலீஸ் தரப்பில் அனுப்பப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; ''இரா.அருள் அவர்கள் மாநகர மாவட்ட செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 1 இராமவேணி வளாகம், அழகாபுரம், பெரியபுதூர், சேலம். தங்களது கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா ஆணை படி சேலம் மாநகர பகுதியில் 4.10.2023 மற்றும் 5.10.2023 ஆகிய இரண்டு நாட்களுக்கு சுமார் 25 வாகனங்களில் இருசக்கர வாகன துண்டு பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
தங்களது மனு காவல் துறை கண்ணோக்கில் கவனமுடன் பரிசீலனை செய்யப்பட்டது. மேற்படி மனுவின் அடிப்படையில் அப்பகுதியின் காவல் அலுவலர்களிடம் இது குறித்து விவாதிக்கப்பட்டதில் சேலம் மாநகர பகுதிகளில் சுமார் 25 வாகனங்களில் இருசக்கர வாகன துண்டு பிரச்சாரம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதியானது நகரின் மையப்பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து உள்ள பகுதியாகும்.

இதில் 25 வாகனங்களை கொண்டு இருசக்கர வாகன துண்டு பிரச்சாரம் செய்யும் பட்சத்தில் பொதுமக்களின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சேலம் மாநகரில் தற்போது சேலம் மாநகர காவல் ஆணையாளர் அவர்களின் தமிழ்நாடு மாநகர் காவல் சட்டம் 1888 சட்டப்பிரிவு 4ன் படி 25.09.2023 முதல் 10.10.2023 ம் தேதி வரை அமலில் உள்ளதாலும் சேலம் மாநகரம் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு தடையாணை அமலில் உள்ளது.
எனவே. மேற்படி சூழ்நிலையில் சேலம் மாநகருக்குள் 25 வாகனங்களில் இருசக்கர வாகன துண்டு பிரச்சாரம் செய்யும்போது பொதுமக்களுக்கும் மாநகர போக்குவரத்திற்கும் அதிக பாதிப்பினை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் தங்களது கோரிக்கையின் பேரில் அனுமதி வழங்க இயலாது என இதன் மூலம் தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.இந்த செயல்முறை ஆணையை பெற்றுக்கொண்டமைக்கு ஏற்பளிப்பு வழங்கவும்.'' இவ்வாறு காவல்துறை தரப்பில் தகுந்த காரணங்களை கூறி பாமகவின் இருசக்கர வாகன பேரணி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications