உங்க விஜய் நான் வர்றேன்..எடப்பாடி கோட்டையில் ஓட்டை போடும் விஜய்! சேலத்தில் ஒட்டுமொத்தமாய் தவெக டீம்!
சேலம்: அதிமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதை அடுத்து அதிமுகவின் செல்வாக்கை நிலைநாட்ட ஈரோட்டில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு போட்டியாக விஜய்யும் பொதுக் கூட்டத்தை நடத்தினார்.
இந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலத்தில் வருகிற 30-ஆம் தேதி விஜய் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சேலம் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தினர் தகவல் கூறியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம்
கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்துக்கு பிறகு விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதனால் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் மீண்டும் எப்போது பிரச்சாரத்தை தொடங்குவார் என்று அவரது கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
விஜய் பொதுக்கூட்டம்
இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.எ.செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து விஜய் கொங்கு மண்டலத்தில் தமது கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன் தொடக்கமாக ஈரோட்டில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.
சேலம் மாவட்டம்
ஆளுங்கட்சியான திமுக மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே சேலத்தில் கடந்த நான்காம் தேதி விஜய் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு அவரது சேலம் மாவட்ட நிர்வாகிகள் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஆனால் கடந்த மூன்றாம் தேதி கார்த்திகை தீபம், ஆறாம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால் போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது எனக் கூறி விஜயின் பிரச்சாரக் கூட்டத்திற்கு சேலம் போலீசார் அனுமதி மறுத்தனர்.
கொங்கு மண்டலம்
ஈரோட்டை தொடர்ந்து அடுத்த கட்டமாக கொங்கு மண்டலத்தின் மற்றொரு மாவட்டமான சேலத்தில் வரும் 30-ஆம் தேதி விஜய் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அவரது கட்சி நிர்வாகிகள் மும்முரமாக செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அதாவது ஓமலூர், இரும்பாலை ரோடு, சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ஆகிய மூன்று இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவதற்கான ஆய்வு பணிகளை நடந்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமி
தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், சேலம் மத்திய மாவட்ட நிர்வாகி தமிழன் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் இதுதொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும்,அதற்கான தேதி விரைவில் கட்சி தலைமையின் மூலம் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. தேதி இறுதி செய்தவுடன் முறைப்படி போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்க உள்ளதாகவும் சேலம் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் விரைவில் விஜய் கூட்டம் நடக்க உள்ளதால் அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications