விஜய் வைப்ரேஷன்; அன்றே ஈர்க்கப்பட்டேன்! அய்யநாதன் அடித்த பல்டி? தவெகவில் இணைகிறாரா?
சேலம்: தமிழக வெற்றிக்கழக அரசியல் பயிலரங்கத்தில் பத்திரிகையாளர் அய்யநாதன் பங்கேற்றுப் பேசி இருப்பது பல சந்தேகங்களைக் கிளப்பி வருகிறது.
விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது. கட்சியின் முதல் மாநாடு என்பதால் பலதரப்பு மக்கள் அதைப் பற்றி ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஆனால், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் விஜய் மாவட்டம் தோறும் அரசியல் பயிலரங்குகளை நடத்த ஆரம்பித்திருக்கிறார். கட்டுக்கடங்காத கூட்டத்தை எப்படி நெறிப்படுத்துவது? வாகனங்களை எப்படி விதிமுறை மீறாமல் மாநாட்டுக்கு வருவது? எந்த மாதிரியான பாதுகாப்பு வசதிகளில் கவனம் செலுத்துவது எனப் பல கோணங்களில் யோசித்து விஜய், தனது தொண்டர்களுக்கு இந்தப் பயிலரங்கு மூலம் பயிற்சி கொடுக்க இருக்கிறார். முதல் பயிலரங்கம் இன்று சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தில் நடைபெற்று வருகிறது.

இதன் ஹைலைட் என்னவென்றால் இத்தனை காலங்களாக மூத்த ஊடகவியலாளர் என்று விவாதங்களில் பங்கேற்று வந்த அய்யநாதன் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி இருக்கிறார். இவரைச் சிறப்பு அழைப்பாளராக அழைத்துள்ளதாகப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேடையில் குறிப்பிட்டார். ஆனால், அவர் விஜய் கட்சி தொண்டர்களைவிட வானம் அளவுக்குப் புகழ்ந்து தள்ளிப் பேசி இருக்கிறார். இனி வருங்காலங்களில் அவர் விஜய் கட்சியில் பதவியேற்பார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த அரசியல் அய்யநாதன் பேசுகையில், "உங்களுடைய பாதையில் நான் இப்போது இணைந்திருக்கிறேன். நீங்கள் எல்லாம் பல காலமாகப் பயணித்து இருக்கிறீர்கள். அதன் புதிய பரிமாணம்தான் தமிழக வெற்றிக்கழகம். அதன் தொடக்கம்தான் அக்டோபர் 27. தமிழக அரசியல் களத்தில் இந்த நாள் ஒரு முக்கியமான நாளாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தடுக்கி விழுந்தால் தமிழ்நாட்டில் பல கட்சிகள் இருக்கின்றன. அதற்கு மேல் இன்னும் ஒரு கட்சி தேவையா? தமிழக வெற்றிக் கழகம் என்பது இப்போது தமிழ்நாட்டிற்கு வேண்டுமா? என்றால் நான் தேவை என்றே சொல்வேன்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு என்பது பல ஏழை எளிய மக்களைப் பாதிக்கிறது என்று எப்போது விஜய் சொன்னாரோ, அப்போதுதான் அவரால் ஈர்க்கப்பட்டேன். எனக்கு 70 வயதாக போகிறது. விஜய்யிடம் எதிர்பார்த்துக் கேட்டுப் பெறுவதற்கு எனக்கு ஒன்றுமே இல்லை. அப்படி இருந்தும் அவரது நீட் எதிர்ப்பு காரணமாக ஈர்க்கப்பட்டேன். விஜய் நீட் தேர்வை எதிர்த்த போது அதை விமர்சித்து ஒரு ஊடகம் கூட விவாதம் செய்யவில்லை. அப்போதே அவர் வெற்றி பெற்றுவிட்டார்.
நீட் தேர்வு முறையால் அனிதா முதல் பல உயிர்களை நாம் இழந்துள்ளோம். அப்போது விஜய், 'தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். வெற்றி பெறுவதற்குப் பல வழிகள் இருக்கின்றன' என்று சொன்னார். அந்த வார்த்தை என்ன ஈர்த்தது. எனவே அவர் அரசியலுக்கு வந்தால் சில மாற்றங்கள் நடக்கும் என நம்புகிறேன். நான் பேசிதான் உங்கள் கட்சி வளரப் போவதில்லை. நீங்கள் விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பல வார்டுகளில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றவர்கள். அப்போதே வைப்ரேஷன் தொடங்கிவிட்டது. விஜய் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இத்தனை பேர் ஜெயிக்கிறார்கள். வெற்றி பெற்றால் என்ன ஆகும் என்று பலர் அஞ்சினார்கள்.

தமிழக அரசியல் களம் சூழ்ச்சிகள் நிரம்பியது. இங்கே ஆட்சிக்குக்கூட வந்துவிடலாம். ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்தால் வெற்றிதான். 15% வாக்கு வாங்கிவிட்டால் அது வெற்றிதான். அது அல்ல வெற்றி. மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும். அந்த மாற்றத்தை எளிதாகக் கொண்டுவர முடியாது. பல தடைகள் வரும். ஆளுகின்ற கட்சியைக் கீழே கவிப்பது சாதாரணமான விசயம் இல்லை. ஒருவேளை விஜய் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒரு மாற்று என்பதே தமிழக அரசியல் களத்தில் இல்லாமல் போய் இருக்கும்.
ஆகவே, மாநாட்டைக் கட்டுப்பாட்டை நடத்திக் காட்டவேண்டும். இந்த மாநாட்டைப் பற்றி தவறாகச் சித்தரிக்கப் பல முயற்சிகள் நடக்கும். எனவே ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். கட்டுக்கோப்பாக இருந்து மாநாட்டை நடத்தி முடிக்கவேண்டும். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற எத்தனை பேர் சட்டமன்றத்திற்குப் போகப் போகிறீர்களோ?
ஆகவே, நம்பிக்கையோடு இருங்கள். கட்சியின் கொள்கை என்ன என்று கேட்கிறார்கள். விஜய் கொடி ஏற்றியபோது உறுதிமொழி எடுத்தாரே அது கொள்கை இல்லையா? சமூகநீதி, சமத்துவம், பெண் உரிமை எல்லாம் பல கட்சிகள் சொல்கின்றன என்று சொல்கிறார்கள். இந்திய அரசியலமைப்பு சட்டம் கூடத்தான் இவற்றைச் சொல்கிறது. அதனால் மற்றக் கட்சிகள் அதை விட்டுவிட முடியுமா?" என்று ஆவேசமாகப் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications