கேஆர்எஸ்ஸில் தண்ணீர் இருக்கு! ஆனாலும் மழையை சாக்கா வச்சி மேட்டூருக்கு காவிரியை குறைச்சிட்டாங்க
சேலம்: தென் மேற்கு பருவமழை சூடு பிடித்துள்ள நிலையில் கர்நாடகா நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் உபரி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அங்கு மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 26 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கை கொடுக்கும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் கனமழை பெய்து வந்தது. இந்த மழையால் கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியது.

இதையடுத்து அங்கிருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு காவிரி நீர் வந்தடைந்தது. அங்கிருந்து மேட்டூருக்கு வந்து டெல்டா பாசனத்திற்கு நீர் சென்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் உபரி நீர் காரணமாக மேட்டூர் அணை 120 அடியை எட்டியது.
கேஆர்எஸ் அணை எனச் சொல்லப்படும் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 123.75 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6,547 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அது போல் கபினி அணையின் நீர் மட்டம் 83.04 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8,547 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2063 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 8,610 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்து காணப்பட்டது. நேற்று வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 26 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. பவர் ஹவுஸ் வழியாக 21,500 கனஅடியும், 16 கண் பாலம் வழியாக 4500 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து இன்று 8ஆவது நாளாக 120 அடியிலேயே நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications