ரகசிய வாக்கெடுப்பில் நாங்க சொன்னது வேற.. போட்டு உடைத்த மாஜி தமாகா நிர்வாகி! ஜிகே வாசனுக்கு ஷாக்!
சேலம்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். இன்று தமாகா முன்னாள் நிர்வாகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமாகா நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளுக்கு ஓட்டம் பிடிப்பது ஜிகே வாசனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. கட்சியின் பெரும்பான்மை நிர்வாகிகளின் நிலைப்பாட்டுக்கு எதிராக ஜிகே வாசன் முடிவெடுத்ததாக முன்னாள் நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அண்மையில் அறிவித்தார். ஜிகே வாசன், பாஜகவுடன் கூட்டணி அறிவித்ததுமே அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக யுவராஜா தெரிவித்தார்.

பாஜக உடனான கூட்டணியால் அதிருப்தி: பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா தலைமை நிலைய செயலாளர் அசோகன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பாஜக உடன் கூட்டணி என்பது எனக்கு உளவியல் ரீதியாக ஏற்புடையதாக இல்லை. எனவே கனத்த இதயத்துடன் தமாகாவில் விலகுவதாகவும் அசோகன் தெரிவித்திருந்தார். தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து விலகிய அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் அசோகன் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அதிமுகவில் இணைந்த தமாகா மாவட்ட தலைவர்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவரும், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவருமான காளிமுத்து, கல்பகனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாத்தி காளிமுத்து ஆகியோர் சேலம் நெடுஞ்சாலை நகரில்அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து, நேற்று தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது: அதிமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காளிமுத்து, "தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் மூப்பனாரின் கொள்கைக்கு முரணாக, பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தமாகாவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளேன். மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து, தமாகாவில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பெரும்பான்மை முடிவுக்கு மாறாக வாசன் அறிவிப்பு: அப்போது, கட்சியின் பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு ஆதரவாகவே இருந்தனர். ஆனால், கட்சியில் உள்ள பெரும்பாலானோரின் விருப்பத்துக்கு மாறாக, ஜிகே வாசன் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்திருப்பதால் தமாகாவில் இருந்து விலகியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் த.மா.கா இணைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியினர் அதிருப்தியில் மாற்றுக் கட்சிகளை நோக்கி ஓட்டம் பிடித்து வருவது ஜிகே வாசனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமாகாவின் பெரும்பான்மை நிர்வாகிகளின் முடிவுக்கு எதிராக ஜிகே வாசன் செயல்பட்டதால் நிர்வாகிகள் கட்சி மாறி வரும் நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில், ஜிகே வாசனுக்கு இந்த விவகாரம் பெரும் தலைவலியை தரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications