தனிமையில் சிக்கிய கள்ளக்காதல் ஜோடி.. கண்டித்த கணவன்.. கழுத்தை நெரித்து கொன்ற மனைவி.. சேலத்தில் பகீர்
சேலம்: சேலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.
சேலம் அன்னதானப்பட்டி அருகே மூணாங்கரடில் உள்ள கொத்தடிமை காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா (29). இவரது மனைவி கவிதா(25). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஜீவா கடந்த 16-ஆம் தேதி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அன்னதானபட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜீவாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

குழந்தைகள்
முதல்கட்ட விசாரணையில், பொங்கல் பண்டிகையின் போது ஜீவா அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி வைத்துக் கொண்டு, குடித்துக் கொண்டே இருந்ததால் உயிரிழந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். மேலும் கணவர் இன்றி இனி எவ்வாறு தனது குழந்தைகளை காப்பாற்றுவேன் என கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

செல்போனில் பேச்சு
இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் ஜீவா மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஜீவாவின் மனைவி மீது சந்தேகம் அடைந்த போலீசார் கடந்த சில நாட்களாகவே கவிதாவை ரகசியமாக கண்காணித்துள்ளனர். அப்போது அவர் அன்னதானபட்டி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரிடம் அடிக்கடி செல்போனில் பேசியது தெரியவந்தது.

கள்ளகாதலனுடன் ரகசியமாக சந்திப்பு
இதையடுத்து காவல் ஆய்வாளர் சந்திரகலா தலைமையிலான போலீசார் கவிதாவையும், ராஜாவையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் இருவரும் கள்ளக்காதலர்கள் என்பதும், அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததை தெரிந்துகொண்ட ஜீவா கண்டித்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கவிதாவே தலையணையால் மூச்சை அழுத்தி ஜீவாவை தீர்த்துக் கட்டியதும் தெரிய வந்தது.

கைது
சம்பவத்தன்று ஜீவா அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு மயக்க நிலையில் இருந்ததால் அதிக போதையில் கணவர் உயிரிழந்து விட்டதாக கவிதா நாடகமாடியதும் அம்பலமாகியது. இதையடுத்து ஜீவா மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் கவிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜா ஆகியோரை கைது செய்துள்ளனர். உல்லாச வாழ்க்கைக்காக கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே தீர்த்துக்கட்டிய சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications