தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில் இந்தியாவிற்கு விடியல்.. திமுக மாநாட்டில் முழங்கிய ஸ்டாலின்
சேலம்: தெற்கில் விடியல் பிறந்துள்ளதை போல விரைவில் இந்தியாவில் விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு 20 வயது குறைந்தது போல ஒரு தெம்பு வந்துவிட்டது என சேலம் இளைஞரணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சேலத்தில் இன்று திமுக இளைஞரணி 2-வது மாநாடு தொடங்கியது. மிக பிரம்மாண்டமாக நடந்து வரும் இந்த மாநாடானது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

கடல் போல் திரண்டு இருக்கும் திராவிட பட்டாளமே.. கொள்கை பிடிப்பும் லட்சிய தாரகமும் கொண்ட லட்சக்கணக்கான தம்பிமார்களான உங்களை வீரபாண்டியர் மாவட்டமான சேலத்தில் ஒருசேர பார்க்கும் போது எனக்கு பெரிய உற்சாகமும் மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் பிறக்கிறது. தெற்கில் விடியல் பிறந்துள்ளதை போல விரைவில் நாடு முழுவதும் விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு 20 வயது குறைந்தது போல ஒரு தெம்பு வந்துவிட்டது.
எந்த கொம்பானாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கையூட்டும் மாநாடாக இந்த சேலம் மாநாடு அமைந்து இருக்கிறது. இப்படி என்னை நெஞ்சை நிமிர்ந்து சொல்ல வைத்த இளைஞரணி நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 1980 ஆம் ஆண்டும் ஜூலை 20 ஆம் நாள் மதுரை ஜான்சி ராணி பூங்காவில் இளைஞரணி தொடங்கப்பட்டது.
75 ஆண்டுகளாக திமுக கம்பீரமாக இருப்பதற்கு கொள்கை உரமே முக்கிய காரணம். இளைஞரணியினர் பொறுப்புக்கு வர வேண்டும். திமுக ஆறாவது முறையாக ஆட்சியில் உள்ளது. தமிழகத்தின் வளத்திற்கும், நலத்திற்கும் ஆபத்து வந்துள்ளது. நமக்கு இப்போது வந்துள்ள ஆபத்தை தடுக்கவே இந்த மாநாடு நடக்கிறது. அதிமுக பாஜக உள்ளே, வெளியே விளையாட்டு ஆடுகின்றனர். எடப்பாடியின் பகல் வேஷத்தினை அதிமுகவினரே நம்ப தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications