இதுதான் சிங்கப்பூர்.. அமைச்சர் ஈஸ்வரன் எடுத்த அதிரடி முடிவு.. உடனே வரவேற்கும் பிரதமர்
சிங்கப்பூர்: ஊழல் புகாரில் சிக்கிய இந்திய வம்சாவளியான சிங்கப்பூர் போக்குவரத்து துறை அமைச்சர் ஈஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், தான் அரசிடம் வாங்கிய சம்பளத்தை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளார். இவரது முடிவினை சிங்கப்பூர் பிரதமர் லி வரவேற்றுள்ளார்.
உலகின் ஊழல் என்பதை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத நாடு சிங்கப்பூர். மக்கள் சேவைக்காகவே அங்கு அரசியல்வாதிகள் ஆட்சி செய்து வருகிறார்கள். ஊழலுக்கு எதிரான அனைத்து கட்டமைப்புகளும் சிங்கப்பூரில் வலுவாக இருப்பது ஒரு காரணம் என்றால், மறுபக்கம் ஊழல் செய்து சொத்து சேர்க்க வேண்டும் என்று அங்குள்ள அரசியல்வாதிகள் நினைப்பதும் மற்றொரு காரணம்.

இலவசங்கள் கொடுத்தோ, கவர்ச்சி வாக்குறுதிகள் கொடுத்த அங்கு மக்களை ஏமாற்ற முடியாது. அங்கு யாராவது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினாலோ பதவி விலகிவிடுவார்கள். பதவி விலகி நீதி விசாரணையை எதிர்கொள்வார்கள். இது காலம் காலாமாக உள்ள நடைமுறையாகும்.
சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. சிங்கப்பூர் பிரதமராக பிரதமர் லீ சியன் லூங் பதவி வகித்து வருகிறார். இங்கு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் ஈஸ்வரன் (வயது 61).
இந்திய வம்சாவளியான ஈஸ்வரன் மீது எதிர்க்கட்சியினாரால் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. அதில் முக்கியமான குற்றச்சாட்டு என்றால், சிங்கப்பூர் தொழிலதிபரான ஓங் பெங் செங்க்கு கிராண்ட் பிரிக்ஸ் உரிமையை வழங்க லஞ்சம் வாங்கியதாக ஈஸ்வரன் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து குற்றச்சாட்டுகளை விசாரித்த சிங்கப்பூர் ஊழல் தடுப்பு போலீசார், ஓங் பெங் செங்கை கைது செய்தனர். பின்னர் அவருக்கும், போக்குவரத்து துறை மந்திரி ஈஸ்வரனுக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் போக்குவரத்து அமைச்சராக இருந்த ஈஸ்வரன் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஊழல் தடுப்பு போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர். அதேநேரம் அவரை பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
அந்த விசாரணைக்கு பின்னர், பார்முலா ரேஸ் கார் பந்தயம் நடத்துவதற்கான கிராண்ட் பிரிக்ஸ் உரிமத்தை வழங்க ஓங் பெங் செங்கிடம் இருந்து சுமார் ரூ.2½ கோடி வரை லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் சிங்கப்பூர் நீதிமன்றம் ஈஸ்வரன் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில் ஈஸ்வரன் தனது அமைச்சர் மற்றும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து பிரதமர் லீ சியன் லூங்குக்கு அவர் எழுதிய கடிதத்தில், இந்த ஊழல் குற்றச்சாட்டில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. தான் ஒரு நிரபராதி எனவும், அதேசமயம் எனது அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்ய இது சரியான நேரம் என தான் நினைப்பதாக கூறினார். தொடர்ந்து ராஜினாமா செய்துள்ள ஈஸ்வரன், தான் பெற்ற சம்பளத்தையும் படித் தொகையையும் திரும்ப ஒப்படைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஈஸ்வரனின் இந்த முடிவை சிங்கப்பூர் பிரதமர் லீ ஏற்றுக் கொண்டிருப்பதுடன் லஞ்ச லாவண்யமற்ற அரசு நிர்வாகத்தையே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.ஈஸ்வரன் ராஜினாமாவை தொடர்ந்து போக்குவரத்து துறை பொறுப்பை நிதி அமைச்சர் ஹி ஹாங்தத் கூடுதலாக கவனிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications