'டெல்டா,பீட்டா வகைகளை காட்டிலும்.. ஓமிக்ரான் மின்னல் வேகத்தில் பரவும் அபாயம்..' சிங்கப்பூர் வார்னிங்
சிங்கப்பூர்: டெல்டா மற்றும் பீட்டா கொரோனா வகைகளை காட்டிலும் ஓமிக்ரான் கொரோனா மிக வேகமாகப் பரவும் வாய்ப்புள்ளதாகச் சிங்கப்பூர் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு தான் தற்போது உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது. உலக சுகாதார அமைப்பும் இதைக் கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது.
இதுவரை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் பல்வேறு பயணக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.

தென் ஆப்பிரிக்க ஆய்வாளர்கள்
இருப்பினும், இந்த புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டு சில நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், இது எந்தளவு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்துத் தெளிவான தரவுகள் இல்லை. இது பற்றிய ஆய்வுகளும் உலகெங்கும் நடந்து வருகிறது. ஓமிக்ரான் கொரோனா தீவிர பாதிப்புகளை எதுவும் ஏற்படுத்துவதில்லை என்றே தென் ஆப்பிரிக்க ஆய்வாளர்கள் முதலில் தெரிவித்தனர்.

வேகமாகப் பரவும்
இந்நிலையில், ஓமிக்ரான் கொரோனா குறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்டா மற்றும் பீட்டா வகைகளுடன் ஒப்பிடும்போது, உருமாறிய ஓமிக்ரான் கொரோனா அதிகமாகப் பரவக்கூடியதாகத் தெரிகிறது. மேலும், ஏற்கனவே கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களைத் தாக்கும் ஆற்றலும் (reinfection) கூட ஓமிக்ரான் கொரோனாவுக்கு அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.

தீவிர ஆலோசனை
கடந்த சில நாட்களாகவே தென் ஆப்பிரிக்கா மற்றும் உலகின் பிற நாடுகளில் இருந்து ஓமிக்ரான் கொரோனா குறித்த தரவுகளைத் திரட்டி வருகிறோம். பல்வேறு நாடுகளில் இருக்கும் வல்லுநர்களிடம் இருந்து இது குறித்த ஆலோசனை நடத்தி வருகிறோம். இது ஓமிக்ரான் கொரோனா குறித்துச் சிறந்த புரிதலை அளிக்கிறது. இருப்பினும், தற்போது வரை ஓமிக்ரான் கொரோனா தொடர்பாகப் பல கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை.

கொரோனா வேக்சின்
ஓமிக்ரான் கொரோனா உலகெங்கும் பரவி வரும் நிலையில், வரும் காலத்தில் சிங்கப்பூரிலும் ஓமிக்ரான் பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் என்றே எதிர்பார்க்கிறோம். நம்மிடம் இப்போது இருக்கும் வேக்சின்கள் இந்த ஓமிக்ரான் கொரோனாவுக்கு எதிராக வேலை செய்யுமா என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருகிறது. ஓமிக்ரான் வகையால் ஏற்படும் தீவிர பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளைத் தடுப்பூசிகள் தடுக்கும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம். பொதுமக்கள் அனைவரும் முடிந்தவை விரைவாகத் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அறிகுறிகள்
தென் ஆப்பிரிக்காவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா இல்லாத பிற காரணங்களுக்கு மருத்துவமனையில் அனுமதி ஆகியிருந்தவர்களுக்கு, ஓமிக்ரான் பாதிப்பால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். சளி மற்றும் கரகரப்பான தொண்டை இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. வரும் காலங்களில் இந்த ஓமிக்ரான் கொரோனா குறித்துத் தெளிவான தகவல்கள் கிடைக்கும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அச்சம் ஏன்
இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளில் சில மாற்றங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் இந்த ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவில் 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உருமாறிய கொரோனா குறித்துக் கண்டறிய சில வாரங்களாவது ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் உலக சுகாதார அமைப்பும் இந்த ஓமிக்ரான் கொரோனா வகையைக் கவலைக்குரிய கொரோனா வகையாக பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications